அரசாங்கத்தை வீழ்த்துவதே சம்பந்தனின் இலக்காகும் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
அரசாங்கத்தை வீழ்த்துவதே சம்பந்தனின் இலக்கு. சர்வதேசம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே காரணம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் ஆதரவினை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கும். மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை விரட்டுவதே இவர்களின் குறிக்கோள் எனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு செல்வதற்கான காரணமென்ன? இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிரவாதக் கொள்கையினை மீண்டுமொரு முறை இலங்கையில் பரப்புவதே சம்பந்தனின் இலக்கு. இதனை விரைவில் செயற்படுத்தவே சம்பந்தன் சர்வதேச விஜயங்களையும் சர்வதேச தலைவர்களுடனான சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஏனைய சர்வதேச நாடுகளும் இலங்கையுடன் பகைத்துக் கொண்டமைக்கும் இன்று சர்வதேச அழுத்தம் இலங்கை மீது காணப்படுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதான காரணமாகும். அவர்களின் பழிவாங்கும் நோக்கமே இன்று சிங்கள அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கின்றது.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பதே ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் உள்ள குறிக்கோள்களாகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முழு ஆதரவினையும் வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியினை கவிழ்த்து சர்வதேச தலையீடுகளை இலங்கைக்குள் கொண்டு வந்து இந்த நாட்டை சீரழிக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கான தீர்வினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டையும் பௌத்த சிங்கள மக்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply