மேற்குலக நாடுகளை மகிழ்விப்பதற்கு இரகசிய அறிக்கை தயாரிக்கும் அரசு: ரில்வின் சில்வா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் மேற்குலக நாடுகளை சந்தோஷப்படுத்துவதற்காக அரசாங்கம் இரகசிய அறிக்கையொன்றை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி. சர்வதேச விசாரணைகள் வரலாம்; வராமலும் போகலாம் என்றும் தெரிவித்தது. இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,முப்பது வருட கால யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் பிரிவினைவாத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் மேற்குலக நாடுகளின் சதிகள் படிப்படியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதன் உச்சக்கட்டமே தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான செயலாளர், யுத்தக் குற்றச்சாட்டுகளை ஆராயும் அதிகாரியின் விஜயம் உட்பட மேற்குலக நாட்டு அதிகாரிகளின் விஜயங்கள் அனைத்தும் இலங்கையை நெருக்கடியில் தள்ளி பிரிவினையை ஏற்படுத்துவதற்கான விஜயங்களே ஆகும்.
மனித உரிமை மீறல்கள், ஜனநாயக சுதந்திரம் இல்லாமை, ஊடகச் சுதந்திரம் இல்லாமை போன்ற பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியே வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஆனால், அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு எது விதமான முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை.
நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பொய்களைக் கூறி அரசாங்கம் தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.
அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதையே இலக்காக கொண்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராகவுள்ள சவால்களை முறியடிப்பதற்கும் நாட்டின் நற்பெயரை பாதுகாக்கவும் முயற்சிக்காது பிரிவினைவாத மேற்குலக நாடுகளை சந்தோஷப் படுத்துவதற்காக இரகசியமாக அறிக்கையை தயார் செய்து வருகின்றது.
அத்தோடு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் படையெடுக்கின்றனர். எனவே, சர்வதேச விசாரணைகள் வரலாம். அதேவேளை வராமலும் போகலாம்.
நாட்டுக்கு வருவதற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விசா வழங்கும் அரசாங்கம் அதன் பின்னர் அப்பிரதிநிதிகளுக்கு எதிரான நெருக்கடிகளை கொடுக்கின்றது.
இவ்வாறான அரசின் நடவடிக்கைகளானது இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றதென்ற சர்வதேச நாடுகளுக்கு சாட்சியங்களை வழங்குவதாக அமைந்துள்ளதென்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply