சுதந்திர பலஸ்தீன தேசம் விரைவில் உருவாவது நிச்சயம் இலங்கை ஜனாதிபதி : மஹிந்த ராஜபக்ஷ

கடந்த திங்களன்று ஜோர்தானில் இருந்து பலஸ்தீனத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பலஸ்தீனத்தின் ரமலா நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பலஸ்தீனிய தேசத்தின் ஜனாதிபதி டாக்டர் மஹ்மூத் அப்பாஸ் அன்புடன் வரவேற்றார். இலங்கை ஜனாதிபதியின் இரண்டுநாள் பலஸ்தீனிய விஜயத்தின் போது இருதேசத் தலைவர்களும் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து நட்புறவுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.உங்களைப் போன்ற பெரும் தேசத்தலைவரை வரவேற்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தாம் பெருமையாக கருதுவதாக பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வாஞ்சையோடு இலங்கை ஜனாதிபதியை பார்த்து கூறினார்.

இலங்கைக்கும் பலஸ்தீனிய தேசத்திற்கும் இடையில் நீண்டகால நல்லுறவு நிலவுகிறதென்று தெரிவித்த பலஸ்தீனிய ஜனாதிபதி, இந்த நல்லுறவு எங்கள் இரு நாடுகளுக்கு இடையில் எதிர்காலத்தில் தழைத்தோங்க வேண்டுமென்று கூறினார். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பலஸ்தீனிய தேசத்திற்கு அங்கத்துவம் அற்ற பார்வையாளர் நாடாக அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை தங்களுக்கு அளித்த ஆதரவுக்கு தாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று ஜனாதிபதி அப்பாஸ் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் பலஸ்தீனம் சம்பந்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை களின் உண்மை நிலையை பலஸ்தீனிய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எமது நாடு எப்போதும் உங்கள் நாட்டின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு உதவி செய்யும் என்று உறுதியளித்தார்.

மிக விரைவில் சுதந்திர பலஸ்தீன தேசம் என்ற அந்தஸ்து உங்கள் நாட்டுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் அதற்காக நல்லாசியை கூறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எங்கள் இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு வருடா வருடம் வலுவடைந்து வருகிறதென்று தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கையில் தற்போது ஏற்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பற்றி பலஸ்தீன தலைவருக்கு எடுத்துக்கூறினார். இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகளில் எங்கள் நாடு சகல துறைகளிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறதென்று தெரிவித்த ஜனாதிபதி புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு ஆகிய சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக் கிறதென்று கூறினார். 2009ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் ஒரு பயங்கரவாத சம்பவமும் இடம்பெறவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஏனைய மாகாணங்களை விட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பெருமளவு முதலீடு செய்திருக்கிறதென்று கூறினார்.

மிகக்குறுகிய காலத்தில் புனர்வாழ் வளிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ. சிறுவர் போராளிகளை விடுவிக்கும் ஒரு பெரும் சவாலையும் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறதென்றும் கூறினார்.

இருதேச தலைவர்களுக்கிடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை பலஸ்தீன கூட்டு ஆணைக் குழுவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ தொழில் பயிற்சி நிலையம் ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்படும். இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் களான கமலா ரணதுங்க, ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கைக்கான தூதுவர் காமினி ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply