தேவயானி வழக்கு குற்றச்சாட்டுகள் பதியக் காலக்கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு
அமெரிக்காவில் இந்திய துணைத்தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதியப்பட காலக் கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்திருக்கிறது. அவர் மீது விசா மோசடி குற்றச்சாட்டுக்கள் இனி ஜனவரி 13ம்தேதி பதியப்படும்.தேவயானியின் மீது அமெரிக்க நீதித்துறை , விசா மோசடி மற்றும் தவறான வாக்குமூலம் தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை டிசம்பர் 12ம் தேதி கைது செய்தது.இந்தக் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் முறையாக அவர் மீது சுமத்த ஒரு மாதம் காலக்கெடு உண்டு. அந்த காலக்கெடுவின்படி அவர் மீது ஜனவரி 13ம்தேதிக்குள் குற்றச்சாட்டுக்கள் பதியப்படவேண்டும்.
தேவயானி தரப்பு அமெரிக்க நீதித்துறையுடன் இந்த வழக்கு குறித்து குற்றத்தின் தன்மையை பற்றிய உடன்பாட்டுக்கு வரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுவருவதால், இதற்கு உதவி செய்ய, காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, அவரது தரப்பு வழக்கறிஞர் டேனியல் ஆர்ஷாக் மத்திய நீதிமன்றத்தில் வாதாடினார்.
ஆனால் நீதிபதி சாரா நெட்பர்ன் இந்த வாதத்தை ஏற்க மறுத்து, ஜனவரி 13ம் தேதி அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதியப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தேவயானியின் கைது மற்றும் அவர் கைவிலங்கிடப்பட்டது மற்றும் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டது ஆகியவை இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன.
சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற தனது இந்திய வேலைக்காரப் பெண்ணை அமெரிக்காவுக்கு தனது இல்லத்தில் வேலை பார்க்க அழைத்து வர, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, தவறான தகவல்களைத் தந்தார், அமெரிக்காவில் தரப்படும் ஊதியத்துக்குக் குறைவான ஊதியம் தந்தார் என்று தேவயானி கோபர்கடே மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களை தேவயானி மறுக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply