புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் : வாசுதேவ நாணயக்கார
ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு தொடர்பாக எனக்கு உடன்பாடில்லை. அதனை எதிர்க்கின்றேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மன்னார், மாத்தளை மனிதப் புதைகுழிகள் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு புதிய அரசியலமைப்பொன்று தேவை என்பது எனது கொள்கையாகும்.
இவ்வாறானதொரு புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி வலியுறுத்தப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகள், அதிகாரப் பரவலாக்கல் உள்ளடக்கப்பட வேண்டும். மாகாண சபைகள் இல்லாத ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்தோடு ஒற்றையாட்சிக்குள் நாடு பிரியும் என்ற விவாதம் அர்த்தமில்லாததாகும். இந்தியாவில் இந்த முறைமைதான் உள்ளது. அங்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாநில ஆட்சி நடைபெறுகிறது. அங்கு நாடு பிரிந்ததா, இல்லையே. மக்கள் அதிகாரங்களோடு வாழ்கின்றனர்.
பெரும்பான்மை இன சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டுமே புதிய அரசியலமைப்பு உருவாகினால் அது வெற்றிபெறப் போவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவும் இதற்கு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நடைமுறை சாத்தியமாகாது.
மன்னார் மட்டுமல்லமாது, மாத்தளை மனிதப் புதைகுழிகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.இது நீதியானதும், சுயாதீனமானதுமாக நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply