இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 275 தமிழக மீனவர்கள் ஓரிரு நாள்களில் விடுவிக்கப்படுவர்

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 275 தமிழக மீனவர்கள் ஓரிரு நாள்களில் (ஜனவரி 13) விடுவிக்கப்படுவார்கள் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக சிறையிலுள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உடனுக்குடன் கடிதங்கள் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மீட்கப்பட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆயிரத்து 111 மீனவர்கள் இலங்கை

கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட போதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 275 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கு தூதரக அளவில் துரித நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவையும், அதைச் சுற்றியுள்ள பகுதியையும் இலங்கைக்கு தாரை வார்த்தது தயான். எனவேதான், கச்சத்தீவை மீட்டெடுக்க நான் அயராது பாடுபட்டு வருகிறேன்.

இந்த நிலையில், தமிழக மீனவர்களின் துயர் தீராததற்கு நான் காரணம் என்பது போன்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு நிலை என இரட்டை வேடம் போடுவதும், தன்னுடைய நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் அவருக்கு கைவந்த கலை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதற்கு மூல காரணமான கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்த கருணாநிதி, இப்போது தமிழக மீனவர்கள் பற்றி பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

இலங்கை-தமிழக மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டிலும், அதன்பின் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இரு நாட்டு மீனவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் இன்னமும் மத்திய அரசால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

மத்திய அரசைப் பொறுத்தவரையில் தமிழக மீனவர்கள் பிரச்னையில் அலட்சியப் போக்குடன்தான் செயல்படுகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. பிரதமரால் எனக்கு எழுதப்பட்ட பல கடிதங்கள் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. அந்தக் கடிதங்களில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை கச்சத்தீவு ஒப்பந்தங்களின் மூலம் காவு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

வரும் 20ஆம் திகதி பேச்சு: இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மீனவச் சங்கங்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தன. அதன்படி, வரும் 20 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தலாம் என்றும், இதற்குத் தேவையான அனுமதியை அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கவும், கலந்து கொள்வோர் பட்டியலை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறும் பிரதமரை கேட்டுக் கொண்டு கடிதம் அனுப்பினேன்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் தமிழக மீனவர்கள், அரசின் சார்பில் கலந்து கொள்வோர் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டது. இதைக் குறிப்பிட்டு பேச்சுவார்த்தைக்கான சுமூக சூழ்நிலை ஏற்படுத்தி வரும் போது, தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டி இலங்கைச் சிறைகளில் வாடி வரும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 30 ஆம் திகதியன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினேன். அதன்படி, இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு இப்போது செய்து வருகிறது.

எனது உத்தரவின்படி, சென்னையில் வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இரு நாடுகளின் மீனவர்கள் கூட்டம் தொடர்பாக தமிழக மீன்வளத் துறை செயலாளர் சி.விஜயகுமார் தில்லியில் இந்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்தார். அப்போது, இலங்கைச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், சென்னையில் நடைபெறும் கூட்டத்துக்கு முன்பாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஓரிரு நாட்களில் விடுவிப்பு: இந்த வலியுறுத்தலைத் தொடர்ந்து, இலங்கைச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை வரும் திங்கள்கிழமை (ஜன. 13) முதல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே, தமிழகச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், இலங்கைச் சிறைகளில் உள்ள 275 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும்.

இத்தகைய சுமூகமான சூழ்நிலையில், தமிழக-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply