சிங்கள – ஆங்கில ஊடகங்களில் தமிழர் பிரச்சினை மூடி மறைக்கப்படுவது நாட்டுக்கே உரிய சாபக்கேடு : கூட்டமைப்பு
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள், அவல நிலைமைகள், இறுதிக்கட்ட யுத்தத்தின் போதான குற்றங்கள் மற்றும் தற்போது புதிதாக உருவெடுத்திருக்கும் மன்னார் மனித புதை குழி விவகாரம் உள்ளிட்டவை தொடர்பில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் இனவாத ரீதியான திரிபுபடுத்தல்கள் அல்லது மூடி மறைப்புகள் அனைத்தும் இந்நாட்டின் சாபக்கேடு உள்ளது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கடும் விசனம் தெரிவிக்கின்றது.தமிழ் ஊடகங்களைத் தவிர்ந்த ஏனைய ஊடகங்களில் மூடி மறைக்க முயலப்படுகின்றதான மன்னார் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி விவகாரமானது இன்று சர்வதேசத்தின் பார்வைக்குள் சிக்கியுள்ள அதே வேளை அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வில் இவ்விடயம் முன்வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
மன்னார் புதை குழிவிவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் தமிழ் ஊடகங்கள் தவிர்ந்ததான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் இனவாத ரீதியிலான செய்திகளை வெளியிட்டு வருவது அந்தந்த ஊடகங்களின் இயல்பு மட்டுமல்லாது இந்நாட்டுக்கே உரித்தான சாபக்கேடும் ஆகும்.
கொழும்பு நகரில் தமிழ் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்டால் கொழும்பில் தமிழர் ஒருவர் கைது என்ற ரீதியில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
ஆனால், சிங்கள ஊடகங்களோ கொழும்பில் புலி உறுப்பினர் கைது என்றும் ஆங்கில ஊடகங்கள் கொழும்பில் புலிச் சந்தேக நபர் கைது என்றுமே செய்திகளை வெளியிடுகின்றன. இவ்வாறு ஒரே நாட்டுக்குள் ஒரே செய்தி வெவ்வேறு விதமாக வெளியிடப்படுகின்றது.
தமிழ் ஊடக நிறுவனங்களில் சிங்கள மொழி பரிச்சயமான ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். ஆனால், சிங்கள ஊடக நிறுவனங்களில் தமிழ் மொழி தெரிந்த ஊடகவியலாளர்கள் இருக்கின்றனரா என்பதே இங்கு பிரதான கேள்வியாக இருக்கின்றது.
வெளிநாட்டுத் தலைவர்கள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதையும் வடக்கிற்கு சென்று தமிழ் மக்களின் கடந்த கால, நிகழ்கால நிலைமைகளை அறிவதையும் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் இனவாத ரீதியில் செய்திகளை வெளியிடுகின்றன.
இனவாதப் பேச்சாளர்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் பிரதான இடத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. ஆனால், தற்பொழுது புதிதாக உருவெடுத்துள்ள மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் இங்குள்ள மாற்று ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.
இலங்கையைப் பொறுத்த வரையில் தமிழர் தரப்பிலான வெளிப்பாடுகளில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் நீதி, நியாயமாகவோ, வெளிப்படைத்தன்மையாகவோ செயற்படுவதில்லை.
எது எப்படி இருப்பினும் வடக்கில் உரு வெடுத்துக் கொண்டிருக்கும் சகல பிரச்சினைகளும் உடனுக்குடன் சர்வதேசத்தை சென்றடைந்து கொண்டுதான் இருக்கின்றன.
தலைநகரில் இயங்கிக் கொண்டிருக்கும் தூதுவராலயங்கள் தமது கடமைகளை சரிவரச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. அதே போன்றுதான் மன்னார் புதைகுழி விவகாரம் இன்று சர்வதேசத்தை சென்றடைந்திருக்கின்றது. மன்னார் விவகாரம் தொடர்பில் அடுத்து வரும் பாராளுமன்ற அமர்விலும் பிரஸ்தாபிக்கப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply