விடுதலைப் புலிகளை அவுஸ்ரேலியாவில் தடைசெய்ய வேண்டும்: செனட்டர்

விடுதலைப் புலிகள் அமைப்பை அவுஸ்ரேலியாவில் தடைசெய்ய வேண்டுமென அந்நாட்டின் செனட்சபை உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 25 வருட காலத்தில் 240 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அவுஸ்ரேலியாவில் நிதி திரட்டப்படுவதற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை செனட்சபை உறுப்பினர் ஸ்ரீபன் ஹட்சின், அவுஸ்ரேலிய சட்டமா அதிபர் ரொபேர்ட் மெக்லான்டருக்கு அனுப்பிவைத்துள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்து, அவர்களுக்கு உதவிசெய்யும் தமிழர்களின் கணக்குகளை முடக்கவேண்டும் எனவும், இதன் மூலம் பயங்கரவாதத்துக்கு அவுஸ்ரேலியா ஒருபோதும் உதவி வழங்காது என்ற தெளிவான தகவலை வெளிக்காட்டவேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

33 நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்திருப்பதாகத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் செனட்டர், அதேபோல அவுஸ்ரேலியாவும் தடைசெய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அவுஸ்ரேலியாவுக்கான முன்னாள் தூதுவர் மேஜர் ஜென்ரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டிருந்தமையையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம விடுதலைப் புலிகள் அமைப்பை அவுஸ்ரேலியா தடைசெய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அவுஸ்ரேலியத் தரப்பிலிருந்து சாதகமான பதில் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply