ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி அடுத்த தேர்தலிலும் நிச்சயம் :அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது நிச்சயமாகும். இதில் மீண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ஷ 25இலட்சம் அதிகப் படியான வாக்குகளால் வெற்றி பெறுவதும் நிச்சயமாகும். முடிந்தால் எதிர்க்கட்சியினர் எவரையாவது களமிறக்கி வெற்றி பெற்றுக் காட்டட்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சவால் விடுத்தார்.பிரிவினைவாத மற்றும் விடுதலைப் புலி பயங்கரவாத மன நிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் அரசியல் நடத்துகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வருடம் ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமென்றும் எனவே, இவ் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென மங்கள சமரவீர எம்.பி தெரிவித்துள்ள கருத்து மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரக் கணக்கெடுப்பில் உண்மைத் தன்மை இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அரச தரப்பு நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மங்கள சமரவீர எம்.பி. சொல்லும் திகதியில் அல்ல எந்தவொரு திகதியிலும் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்த தயாராகவே உள்ளோம். ஆனால் தேர்தலை நடத்துவது எப்போது என்பதை தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமும் மக்களுமே ஆகும்.
எமக்கு தேவையான தினத்திலேயே தேர்தலை நடத்துவோம். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எமக்கு எமது கட்சியிலேயே வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருக்கின்றார்.
மக்கள் ஆதரவும் அவருக்கு உள்ளது. அந்த ஆதரவை அசைக்க முடியாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்றார்.
இம்முறை தேர்தலில் 25இலட்சம் மேலதிகமான வாக்குகளால் வெற்றி பெறுவது நிச்சயமாகும்.அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோம்.
ஆனால் ஐ.தே.கட்சிக்கு இதில் களமிறக்க வேட்பாளர் இருக்கின்றாரா. அல்லது பொது வேட்பாளர் யாரென்பதை கூற முடியுமா? எதுவுமே கிடையாது. ஐ.தே.கட்சி, ஜே.வி.பி., சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி அனைத்து கட்சிகளும் வங்குரோத்து அடைந்துவிட்டன.
கீழே விழுந்து விட்ட இவர்களால் மீள எழமுடியாது. வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத எதிர்க்கட்சியினால் எப்படி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
நாட்டில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சி நடைபெறுகிறது. ராஜபக்ஷ றெஜிமன்ட் ஆட்சி நடக்கவில்லை. ஆனால் மங்கள எம்.பி.யின் கனவிலும் ஜனாதிபதியே வருகிறார். அதற்காக அனுதாபப்படத்தான் முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.யும் இன்றும் விடுதலை புலி பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத மனநிலையிலிருந்து மீளவில்லை.
யுத்தம் முடிந்து தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதனை கூட்டமைப்பினர் விரும்பவில்லை
எனவே மீண்டும் சமாதானத்தை சீர்குலைத்து பயங்கரவாதத்தை உருவாக்க புள்ளிவிபரக் கணக்கெடுப்பில் நம்பகத் தன்மை இல்லையென்ற பொய் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
அரசாங்க அதிகாரிகளால் அதுவும் தமிழ் அதிகாரிகளின் பிரசன்னத்துடனேயே இது மேற்கொள்ளப்பட்டது. அதனையே பொய்யெனக் கூறுவது சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்காகவே ஆகும்.
ஏனென்றால் இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொள்வதன் மூலமே சர்வதேச நாடுகளிடம் சிறப்புரிமையை பெற முடியும்.
சுரேஷ் பிரேம்சந்திரன் எம்.பி.க்கு அரசியலமைப்பு தெரியாது. பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தெரியாது. எனவே தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்.
தமிழ் மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்கின்றனர். படையினர் விசாரிப்பதில்லை, தேசிய அடையாள அட்டையை பரிசோதிப்பதில்லை, நாட்டில் எங்கும் அவர்களால் வாழ முடியும், வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் துரித கதியில் முன்னெடுக்கிறது.
விரைவில் யாழ்ப்பாணத்துக்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும். இதன் பிரதிபலன்களை வடபகுதி இளம் சமூகத்தினர் அனுபவிப்பார்கள். இதனால் கூட்டமைப்பின் புலி மனோநிலை அரசியல் வீழ்ச்சியடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply