அமெரிக்காவின் பிரேரணை இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும்: சுரேஷ்
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்துமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது.
யுத்தம் முடிந்த பின்னரும் தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை விடுத்து சர்வதேசம் தமிழ், சிங்கள மக்களின் நல்லிணக்கத்தைக் குழப்புவதாக அரசாங்கம் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது.
நாட்டில் யுத்தம் முடிந்த பின்னர் இந்த அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்து இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தது. அவ் ஆணைக்குழு அனைத்துத்தரப்பினரிடமும் விசாரணை களை நடத்தி கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் என்னும் அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தது. இவற்றில் கூறப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல்போனோர் தொடர்பான விடயம், வடக்கு, கிழக் மாகாணங்களிலிருந்து இராணுவ வெளியேற்றம், இடம் பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தல் மற்றும் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணல்போன்றவற்றை இந்த அரசாங்கம் இதுவரை நடைமுஈறைப்படுத்தவில்லை. இவற்றை நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத்தீர்வு கண்டு இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் சர்வதேசம் இன நல்லிணக்கத்தைக் குழப்புவதாகப் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களில் ஈடுபடாது தொடர்ந்தும் தமிழ் _ சிங்கள இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தித் தீர்வைக்கான இலங்கை அரசாங்கம் தகுதியற்றது என்பது அதன் செயற்பாடுகள் மூலமே வெளிப்படுகின்றது.
வடக்கில் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கோப்பாப்புலவு, கிழக்கில் சம்பூர், பிரதேசங்களிலும் மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை. இப்பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றங்கள் இனிமேல் நடைபெறமாட்டாது என்ற அளவுக்கு இந்த செயற்பட்டு வருகின்றது. தற்போதும் மக்கள் மத்தியில் இராணுவத் தளங்களை புதிதாக அமைத்து வருகின்றது. அண்மையில் கொடிகாமம் பகுதியிலுள்ள தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரித்து இராணுவத்தினர் நிரந்தர பிரிகேட் முகாமை அமைத்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழ் மக்களை அவர்களின் பூர்வீக இடங்களில் மீளக்குடியேறவிடாது தடுத்து வருவதுடன் மறுபுறத்தில் அந்த இடங்களில் புதிதாக இராணுவ முகாம்களை அமைவதை இந்த அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அண்மையில் திரட்டப்பட்ட புள்ளி விபரத் தரவுகள் உண்மையானவை அல்ல. இது முழுமையான தரவைக் கொண்டிருக்கவில்லை. மாறாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் எழும் சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே அவசர அவசரமாக இவ்விபரத் திரட்டு நடைபெற்றுள்ளது. யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்தும் இன்றுவரை எந்த புள்ளிவிபரத் திரட்டும் நீதியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் ஆரம்பத்தில் பொலிஸ் நிலையங்களிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு நிலையங்களிலும் காணாமற்போனோர் தொடர்பாகப் பதிவு செய்துள்ளனர். இவற்றைப் பெற்றாலே உண்மைத் தரவு தெரியவரும். இவற்றை எல்லாம் தவிர்த்து அரசாங்கம் மேற்கொண்ட புள்ளி விபரத்திரட்டில் உண்மைநிலை தெரியவரவாய்ப்பில்லை.
இப்புள்ளிவிபரத் திரட்டு சரியான தரவுடன் எடுக்கப்பட்டது அல்ல என நாம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே அரசாங்கம் நல்லிணக்கக ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தி நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். மாறாக சர்வதேசத்தைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply