சம்பந்தன் காலத்திலேயே தீர்வு வேண்டும் பிளவு தமிழருக்கு ஆரோக்கியமானதல்ல : இ.தொ.கா.
வடக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஓர் அமைப்பு உருவாவது பாராளுமன்றத் தெரிவுக்குழுவை இலக்கு வைத்தே ஆகும். எனவே பிளவு என்ற அபாயத்துக்கு இடம் கொடுக்காது சம்பந்தன் காலத்திலேயே தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயல வேண்டும். மாறாக பிளவுகள் ஏற்படுமானால் அது தமிழருக்கு ஆரோக்கியமானதாக அமையாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரி.வி. சென்னன் தெரிவித்தார்.பதுளை பணிமனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சென்னன் இங்கு தொடர்ந்து பேசுகையில்,
தமிழ் மக்களுக்கான மேம்பாடுகள் சர்வதேசம் மூலமாகத்தான் பெற்றுக் கொடுக்க முடியுமென்ற நிலைப்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருந்து வருகின்றது. தற்போதைய அரசையோ ஜனாதிபதியையோ நம்ப முடியாதென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறி வருகின்றது. பாராளுமன்ற தெரிவுக் குழு விடயத்திலும் அக்கறையற்ற நிலையினையே கூட்டமைப்பு கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் மீது கூட்டமைப்பிற்கு கருணை இருக்குமேயாகில் ஜனாதிபதியின் கரங்களைப்பற்றி அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொளண்டு தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கலாம். அதைவிடுத்து சர்வதேசமே எம்மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதில் பயன் ஏதும் கிடைத்து விடப்போவதில்லை.
நாடும் ஏடும் போற்றும் வகையில் பெற்றிருந்த அபார வெற்றியை தமிழன் என்ற ரீதியில் நாம் பாராட்டுகின்றோம். ஆனால் அன்றிருந்த ஒற்றுமை ஐக்கியம் தற்போது சிதைந்து கொண்டு போவதைப் பார்க்கும் போது தலை குனிய வேண்டியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கும் வட மாகாண முதலமைச்சருக்குமிடையே இருந்து வரும் நீர்ப்பிர்ச்சினை, அத்துடன் வட மாகாணத்தில் உருவாக்கப்பட்டு வரும் பிறிதொரு தமிழ் கூட்டமைப்பு மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே இருந்து வரும் பனிப்போர் இத்தகைய நிலைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்த ஒற்றுமை ஐக்கியம் சிதைந்து பிளவு ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலத்திலேயே தமிழர் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விடல் வேண்டும். தவறின் தமிழர் பிரச்சினைகள் தொடர் கதையாகவே தான் இருக்கும். ஆகவே சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடி ஏற்படப்போகும் பிளவினை தடுத்து நிறுத்த வேண்டும். பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் விவேகத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைவதற்கே புதிய தமிழ் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகின்றதென்பதையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உணர வேண்டும். ஆகையினால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியின் நேசக்கரங்களைப் பற்றி பேச்சுவார்த்தைகளுக்கு முதலில் சென்று பார்க்க வேண்டும். அதன் பிறகு மாற்று செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்.
இந்திய வம்சாவளியினருக்கான பிரஜாவுரிமை தென்னிந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு வந்த எம்மக்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமையற்ற நிலையே இருந்து வந்தது. அதனைப் பெற்றுக் கொள்ள பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டும் பயன் கிடைக்கவில்லை. இது விடயத்தில் இ.தொ.கா தலைமை வெகு விவேகமாக செயற்பட ஆரம்பித்தது. தமிழ்தேசியக்கூட்டமைப்பு போன்று இ.தொ.கா. தலைமை செயற்பட விரும்பவில்லை. எமது மக்களின் பிரஜாவுரிமை தொடர்பாக சர்வதேசத்திற்கு சென்று நாம் மண்டியிடவோ ஒப்பாரிவைக்கவோ இல்லை. எமது நாட்டு பிரச்சினையை நாமே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பல்வேறு வகையில் சாத்வீகப் போராட்டங்களை இ.தொ.கா. மேற்கொண்டது அதற்கென ஆயுதப் போராட்டங்களில் நாம் ஈடுபடவில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply