தனது 90 வயது தந்தையை கவனிக்க 1 மாதம் ‘பரோல்’ கேட்டு நளினி ஐகோர்ட்டில் மனு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் நளினி சென்னை ஐகோர்ட்டில் ஒருமனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:– எனது தந்தை சங்கர நாராயணன். நெல்லை மாவட்டம் அம்பலவாண புரத்தில் வசித்து வருகிறார். தற்போது 90 வயதான அவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். 8 வருடங்களுக்கு முன்பு அவரை நேரில் பார்த்தேன்.அவரது கடைசி நாட்களில் அருகில் இருந்து கவனிக்க விரும்புகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது சகோதரர் பாக்கியநாதன் திருமணத்துக்கு 3 நாள் பரோலில் சென்று இருந்தேன்.
தற்போது எனது தந்தையை கவனிப்பதற்காக ஒரு மாதம் பரோலில் விடுப்பு வழங்க வேண்டும் என்று வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளரிடமும், சிறை துறை கூடுதல் டி.ஜி.பி. யிடமும் மனு கொடுத்தேன்.
எனது மனுவை பரிசீலித்து ஒரு மாதம் பரோலில் விடுப்பு வழங்க வேண்டும். அதன் மூலம் எனது தந்தையை கடைசி காலத்தில் கவனிக்க முடியும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நளினியின் மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜர் ஆனார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை பிப்ரவரி 11–ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். மனுவுக்கு பதில் அளிக்கும்படி பெண்கள் சிறை கண்காணிப்பு அதிகாரி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply