இரண்டாம் ஈழப்போரினை ஆரம்பிக்கும் வகையிலேயே ஜெனிவா தீர்மானம் அமையப்போகிறது :வீரவன்ச
இரண்டாம் ஈழப்போரினை ஆரம்பிக்கும் வகையிலேயே ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டின் தீர்மானம் அமையப்போகின்றது. இரண்டாம் ஈழப்போருக்கு சிங்கள மக்களும், அரசாங்கமும் தயாராக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும் ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு இலங்கைக்கு தூக்குக்கயிறாகவே அமையும். இது இடம்பெற்றால் இலங்கையில் சிங்கள இனம் அழிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தேசிய சுதந்திர முன்னணியால் நேற்றுமுன்தினம் கொழும்பு கெம்பல் பாக் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு சர்வதேச ஒத்துழைப்புடன், இலங்கைக்கு எதிரான செயற்றிட்டத்திலேயே இடம்பெறுகின்றது. இலங்கையின் வெற்றியினை தடுத்து விடுதலைப் புலிகளை அழித்தமையினை பழிவாங்கும் நோக்குடனேயே ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு இடம்பெறுகின்றது. புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து நடத்திவரும் நாடகத்தினை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற முப்பது வருடகால யுத்தத்தில் இலங்கை வாழ் சிங்களவர்கள் பலவற்றினை இழந்து விட்டனர். வடக்கில் இருந்த சிங்களவர்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர், பலர் கொல்லப்பட்டனர், இவற்றினை எந்தவொரு அமைப்பும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கவனத்திற் கொள்ளவில்லை.
மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தினை இலங்கை மீது செலுத்தி இலங்கையை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு முயற்சிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலி இயக்கத்தினை அழித்து ஆட்சி அமைக்கவும், கொத்து குண்டுகளின் மூலமும், கிபிர், வான் தாக்குதல் மூலமும் வடக்கை கைப்பற்றும் சிந்தனையினை அமெரிக்காவே வழங்கியது. 2001ஆம் ஆண்டு அமெரிக்க அறிக்கையில் இச் செயற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆனால், இன்று எமது அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதும் வீண் பழி சுமத்தி சர்வதேச விசாரணைகளில் சிக்கவைக்கின்றது.
விடுதலைப் புலிகளை தோற்கடித்த நாம் இன்று சர்வதேச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தீய சக்திளின் இரண்டாம் ஈழப்போருக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாகவே வடமாகாண சபைத் தேர்தலும், கூட்டமைப்பின் வெற்றியும் அமைந்தது. தற்போது ஜெனிவா பேச்சுவார்த்தைகள் மூலம் தனித் தமிழ் ஈழத்தினை உருவாக்கி இலங்கையில் மீண்டுமொரு போராட்டத்தினை ஆரம்பிக்க திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை வெ ளியேற்றி, 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தி நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் திட்டம் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாம் ஈழப்போரின் போது இலங்கையை காப்பாற்ற சிங்கள பௌத்த மக்களும், அரசாங்கமும் தயாராக வேண்டும். இல்லையேல் நாட்டில் மீண்டும் புலிக்கொடி பறக்கும் சூழல் ஏற்படும்.
மேலும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு இலங்கைக்கு தூக்குக்கயிறாகவே அமையும். அரசாங்கத்தின் மீது பொய்க் குற்றச் சாட்டுக்களை சுமத்தி நாட்டில் பிரிவினையினை உருவாக்கும் வேலைத் திட்டம் ஆரம்பமாகி விட்டது. நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மேற்கத்தேய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிரான தேசத்துரோக செயலில் ஈடுபட்டுள்ளனர். அன்று அரசாங்கத்தை ஆதரித்து யுத்தத்தை முறியடிக்க தந்திரமாக செயற்பட்ட கட்சிகள் இன்று சர்வதேச சக்திகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் இன்று தனியாக்கப்பட்டு விட்டாலும் அரசாங்கத்திற்கு மக்கள் பலம் இருக்கின்றது. சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் பிரிவினை சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
இவ் விடயத்தில் மக்கள் தாமதித்தால் எதிர்காலத்தில் இலங்கையில் சிங்கள இனமே அழிந்துவிடும். எனவே, எதிர் வரும் தேர்தல்களில் சிங்கள மக்களின் ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply