ஏ-9 வீதியினூடாக யாழ்ப்பாணத்துக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ்ப்பாணத்துக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஏ- 9 பிரதான வீதியினூடாக கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களுக்கு அவசியமான அனைத்து உணவுப் பொருட்களையும் தரைமார்க்கமாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான அவசரக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, சமூக சேவைகள் மற்றும் சமூக நல அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதுவரை காலமும் யாழ்ப்பாணத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடல் மார்க்கமாகவே எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதையடுத்து கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் லொறிகள் மூலம் தரைமார்க்கமாக கொண்டு செல்ல கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
படையினரின் போக்குவரத்துக்காகவும் விநி யோக நடவடிக்கைக்காகவும் யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 வீதி நேற்று (பெப். 2) காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 24 வருடங்களின் பின் திறக்கப்பட்ட மேற்படி பாதையினூடாக விடுமுறைக்காக வீடு செல்லும் படையினர் 20 பஸ் வண்டிகளில் ஆனையிறவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணமானார்கள். சுபவேளையான காலை 9.02 மணிக்கு இந்த முதலாவது குழு தமது பயணத்தை ஆரம்பித்தது.
இதே வேளை மற்றொரு படை வீரர்கள் குழு 24 பஸ்களில் அனுராதபுரத்தில் இருந்து ஆனையிறவுக்கு பயணமானது.
படையினரின் போக்குவரத்துக்காக ஏ-9 வீதியை திறக்கும் உத்தியோகபூர்வ வைபவம் யாழ். பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்கவின் தலைமையில் ஆனையிறவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ். பிரிகேட் தளபதி பிரிகேடியர் ருக்மல் டயஸ் இராணுவத்தின் 55 ஆம் படைப் பிரிவு கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா, இராணுவத்தின் 51 ஆவது படைப் பிரிவு தளபதி பிரியங்க ஜெயசுந்தர இராணுவத்தின் 7வது விசேட படைப் பிரிவு தளபதி கேர்ணல் ரொஷான் செனவிரத்ன உட்பட பல உயரதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
ஏ-9 வீதி திறக்கப்படுவதையொட்டி ஆனையிறவில் இராணுவ நகர்வு கட்டுப்பாட்டு நிலையமொன்றும் நிறுவப்பட்டுள்ளது. வீதியின் இரு மருங்கிலும் தேசிய கொடிகள் மற்றும் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளினதும் கொடிகள் என்பன பறக்கவிடப்பட்டிருந்தன. ஏ-9 வீதியும் விழா நடைபெறும் பகுதியும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விடுமுறையில் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் 500 படை வீரர்கள் 20 பஸ்களில் காலை 9.02 மணிக்கு தெற்கு நோக்கி பயணமானார்கள். பாதையின் இருமருங்கிலும் வரிசையாக நின்றிருந்த படையினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்வு தொடர்பான செய்தி திரட்டுவதற்காக பெருமளவு ஊடகவியலாளர்கள் ஆனையிறவுக்கு வருகை தந்திருந்தனர்.
இவ்வளவு காலமும் படையினரின் போக்கு வரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகள் ஆகாய மார்க்க மாகவும் கடல் மார்க்கமாகவுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply