இலங்கை கிரிக்கெட் அணியினரை அழைத்துவர விசேட விமான ஏற்பாடு:நேபாளிலிருந்து ஜனாதிபதி மஹிந்த
இலங்கை கிரிக்கெட் அணியினரை பாகிஸ்தானிலிருந்து உடனடியாகத் திருப்பி அழைத்துவர விசேட விமானமொன்றை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அதேநேரம், தம்முடன் நேபாள விஜயத்தில் கலந்து கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவை உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்.
நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் அணியினர் தாக்குதலுக்கு இலக்கான செய்தியைக் கேள்வியுற்றதும் உடனடியாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
இலங்கை அணியினர் தாக்கப்பட்டமையை ஜனாதிபதி வன்மையாகக் கண்டித்துள்ளாரெ ன்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, ஜே.என்.பீ. தலைவர் விமல் வீரவன்ச எம்.பீ. ஆகியோரும் கண்டித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றதும், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் காமினி லொக்குகே, இலங்கை வீரர்களுக்குப் பாரிய ஆபத்து ஏற்படவில்லையென்றும், அவர்களை உடனடியாகத் திருப்பி அழைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
பெளஸி
அமைச்சர் பெளசி விடுத்துள்ள அறிக்கையில், தாக்குதலுடன் தொடர்புடையவர்களைத் தேடித் தண்டிப்பதற்கு பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தே.சு.மு
இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணி சார்க் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாகத் துடைத்தெறிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றுக்காலை இலங்கை அணியினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட அவர்களின் உறவினர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்குப் படையெடுத்திருந்தனர்.
இதனையடுத்து சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டுலிப் மென்டிஸ் அவசர செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி நிலைமையை விளக்கினார். இலங்கை அணியினருக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என அவர் அறிவித்தார். அணியின் உதவிக் கப்டனான குமார் சங்ககார தொலைபேசியில் தொர்பு கொண்டு, தமது அணியினருக்குப் பாதிப்பு இல்லை என்பதை உறுதிப் படுத்தினார்.
இலங்கை அணி தாக்கப்பட்ட சம்பவத்தை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் விசேட செய்தியாக வெளியிட்டதுடன் பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிய வண்ணம் இருந்தன.
தாக்குதலை நடத்த வந்த தீவிரவாதிகளின் நடமாட்டத்தையும் அவை ஒளிபரப்பின. பாதுகாப்பு கமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை இணையத்தளங்களும் வெளியிட்டிருந்தன.
லாஹுர் தாக்குதலை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply