புலிகளின் விமானத்தை அழிப்பதற்கு தந்திரோபாயங்களை கையாள்கிறோம் – அரசாங்கம் தெரிவிப்பு

உலகத்தில் பூச்சிகொல்லிகளை தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற சிறிய ரக விமானங்களையே புலிகள் பயன்படுத்துகின்றனர். புலிகளின் அவ்வாறானதொரு விமானமொன்றை ஒரு மாதத்திற்கு முன்னர் விமானப்படையினர் தாக்கியழித்துள்ளனர்.

ஏனைய வற்றையும் தாக்கியழிப்பதற்கான தந்திரோபாயங்களை கையாள்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகலரும் ஒத்துழைக்கவேண்டும் அதைவிடுத்து கோப்பிக்கடை பேச்சுவார்த்தைகளுக்கெல்லாம் அரசாங்கத்தினால் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மன்னாரில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்கள் சுமார் ஒன்றரை மணித்தியாலயமாக வானில் பறந்துள்ளது மட்டுமல்லாது சுமார் 300 கிலோமீற்றம் தூரம் பறந்து கொழும்பிற்குள்ளும் வந்துள்ளது. அனுராதபுர விமானத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்களை ஒரு சில விநாடிகளுக்குள் தாக்கியழிக்க முடியுமாயின் அன்று சுமார் 90 நிமிடங்கள் வானில் இருந்த புலிகளின் விமானங்களை ஏன்? அழிக்க முடியவில்லை இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதும் பேசப்பட்டதா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

புலிகளில் பயன்படுத்துகின்ற மிகவும் சிறிய ரக விமானங்கள் உலகத்தில் பூச்சிகொல்லி தெளிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான விமானங்களில் ஒன்றை விமானப்படையினர் ஒரு மாதத்திற்கு முன்னர் தாக்கியழித்துள்ளனர். எதிரியின் தந்திரோபாயங்களை எதிர்பார்த்திருக்க முடியாது என்பதனால் தான் படிப்பதற்காகவும் ,வாசிப்பதற்காகவும் கொடுக்கப்பட்ட புத்தங்களுக்குள் குண்டுகளை பொருத்துகின்றனர். இவ்வாறான தொரு நிலையில் எதிரியின் ஏனைய விமானங்களை தாக்கியழிப்பதற்கான வெற்றிகரமான தந்திரோபாயங்களை பாதுகாப்பு தரப்பினர் கையாள்கின்றனர். அந்த தந்திரோபாயங்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது.

தரையில் இருக்கின்ற படையினர் அன்று மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாகவே புலிகள் இலக்கை மாற்றிக்கொண்டனர். அது பாரிய வெற்றியாகும். எதிர்காலத்தில் புலிகளின் பூச்சிகொல்லி விமானமும் தாக்கியழிக்கப்படும் . இவ்வாறானதொரு நிலையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply