புதுக்குடியிருப்பு நகர் முழுவதும் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில்

புலிகளின் இறுதி கோட்டையான புதுக்குடியிருப்பு நகர் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு நகருக்குள் கடந்த மாதம் 24 ஆம் திகதி பிரவேசித்த இராணுவத்தின் 58வது மற்றும் 53வது படைப் பிரிவுகள் அந்தப் பிரதேசத்தை நேற்றுக் காலை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு நகரை முழுமையாக கைப்பற்றும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் இரவு பகலாக நடத்திய கடுமையான தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு நகர் கைப்பற்றபட்டதையடுத்து புலிகளிடம் எஞ்சியிருந்த ஓரளவு நம்பிக்கையும் இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இது வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் படையினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்,

புதுக்குடியிருப்பு சந்தி என்பது பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதி, ஒட்டுச் சுட்டான் மற்றும் புதுமாத்தாளன் ஆகிய நான்கு முக்கிய வீதிகளை இணைக்கும் சந்தியாகும்.

புதுக்குடியிருப்பு வட பகுதியிலிருந்து முன்னேறிச் சென்ற இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினரும், புதுக்குடியிருப்புக்கு தென் பகுதியிலிருந்து முன்னேறிச் சென்ற இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான படைப் பிரிவினரும் பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதி சந்தியில் நேற்றுக் காலை சந்தித்துள்ளனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்களின் தங்குமிடம், மறைவிடங்கள், பயிற்சி தளங்கள் ஆயுதக் களஞ்சிய சாலை மற்றும் சகல தொடர்பு நிலையங்களும் அமைந்த பிரதேசமாக புதுக்குடியிருப்பு நகரம் விளங்கியதாக தெரிவித்த பிரிகேடியர், புலிகள் தமது இறுதியானதும் முக்கியமானதுமான கோட்டையாக வைத்திருந்த நகரையும் முற்றாக இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது முல்லைத்தீவு வடக்கு பிரதேசத்திலுள்ள கடல் ஏரியை நோக்கி புலிகள் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply