நாகர் கோயில் கடற்பரப்பில் இருமணிநேரம் கடற்சமர்; 7 கரும்புலிகள் உட்பட 16 கடற்புலிகள் மரணம்; 5 கடற்படையினர் காயம்; புலிகளின் 4 படகுகள் நிர்மூலம்
நாகர் கோயில் – பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று (நவ. 1) காலை இடம்பெற்ற இருதரப்பு மோதலில் புலிகளின் நான்கு படகுகளை கடற்படையினர் நிர்மூலமாக்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சமரில் 16 கடற்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் எழு பேர் கடற் கரும்புலி முக்கியஸ்தர்கள் எனவும், அவர்களில் ஒருவர் கண்ணன் என இனம் காணப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. இந்த மோதலில் 5 கடற்படையினரும் காயமடைந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புலிகள் விடுத்துள்ள இணைய அறிக்கையில், வடமராட்சி கிழக்கு குடந்தனை முதல் நாகர் கோயில் வரையான கடற்பரப்பில் இன்று அதிகாலை 5.15 மணி முதல் காலை 7.00 வரை இலங்கைக் கடற்படையினருடன் இடம்பெற்ற பாரிய மோதலில் டோறா பீரங்கிப் படகொன்றையும் ஏ530 ஹோவர்ட்கிராப்ட் கனரக படகொன்றினையும் மூழ்கடித்ததாக தெரிவித்துள்ளது. இந்த மோதலின் தமது தரப்பில் ஏழு கரும்புலிகள் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை குறித்து விமானப்படைப் பேச்சாளரைக் கேட்ட போது, கடற்படையினரிடம் ஹோவர்ட்கிராப்ட் கனரக படகு ஒன்று மட்டுமே இருப்பதாகும் அது தற்போது கொழும்பில் தரித்து நிற்பதாகவும் தெரிவித்தார். இத்தாக்குதல் சம்பவத்தின் பின் தாம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கடற்புலிகளின் 4 சடலங்களை கண்டு எடுத்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply