ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலைத் தாக்குதலுக்காக புலிகள் 63 இலட்சம் ரூபாவை வழங்கினர்
வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விடுதலைப்புலிகள் 63 இலட்சம் ரூபா வழங்கியுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் அநுராதபுரம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்களன்று அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் இரகசிய பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரினதும் மனைவியினதும் மதவாச்சி மக்கள் வங்கிக்கணக்கில் 35 இலட்சம் ரூபா விடுதலைப்புலிகளால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும், 28 இலட்சம் ரூபா பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்களிருவரதும் வங்கிக்கணக்குகளிலும் 35 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், தமக்கு 28 இலட்சம் ரூபாவை பல்வேறு தடவைகளில் புலிகள் வழங்கியதாக சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரி தனது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்கி கையடக்கத் தொலைபேசி சிம் ஒன்றையும் கண்டியிலுள்ள கடையொன்றில் பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்த இரகசியப் பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply