மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

தேர்தலில் கிடைத்த வெற்றி மக் களின் வெற்றியாகும் அந்த வெற்றியின் பிரதிபலனை மக்கள் அனுபவிக்கச் செய்வது முக்கியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நேற்றைய தினம் மேல், தென் மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்க ளுக்கு சத்தியப்பிரமாணம் வழங்கி அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மாகாண சபை தேர்தல் வெற்றி மக்கள் பெற்றுத் தந்த வெற்றி. அந்த வெற்றியின் பிரதிபலனை அந்த மக் கள் அனுபவிக்கும் வகையில் அனை வரும் செயற்படுவது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

உங்களை தேர்ந்தெடுத்து வாக்களி த்தது மக்களே! அதனை மனதிற்கொண்டு வெற்றிபெற்ற பின் மமதையை விடுத்து மக்களை நெருங்கி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் கூட நான் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் விமர்சிக்கும் சக்திகள், குறிப்பாக எதிர்க் கட்சியினர் போன்று சிந்திக்க வேண்டும் என நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். இந்த தேர்தலில் எதிர்க் கட்சி தாம் வென்றதாக நினைக்கின்றது. புள்ளி விபரங்களின் படி பார்த்தால் நாமே வெற்றிபெற்றுள்ளோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு சிந்திப்பது நல்லது என நான் குறிப்பிடவிரும்புகின்றேன்.

அவர்கள் சாதகமானதாக சிந்திக்கின்றனர். எனினும் ஆளும் கட்சி வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தது போன்று உள்ளனர் இதுவும் மக்களுக்கு நல்லது. வெற்றி ஆரவாரிப்பில் இருப்பதை விட தோல்வியடைந்துள்ளோம் என நினைத்துக்கொண்டு மக்களிடம் மேலும் நெருங்கி சேவையாற்ற இது சிறந்தது. இரண்டுமே நல்லது.

எதிர்க் கட்சியினர் போன்று சிந்திப்பது நல்லது. எனினும் அந்த கொள்கையை கடைப்பிடிக்க வேண்டாம் என்றே நான் அந்த மாணவர்களிடம் கூறினேன். ஏனெனில் எப்போதும் விமர்சிப்பது, அனைத்தையும் எப்பொதும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்பதே அவர்களது வேலை. இதனால் அவ்வாறு பழகிவிடக்கூடாது எனவும் நான் மாணவர்களிடம் கூறினேன்.

தேர்தலில் வெற்றிபெற்றோரில் சிரேஷ்ட நிலையில் பலர் உள்ளனர். அவர்கள் அனைவருமே அமைச்சர் அல்லது வேறு பதவிகளை எதிர்பார்க்கின்றனர். எனினும் இந்த தேர்தல் முறைப்படி முதலமைச்சருக்கு மேலதிகமாக மேலும் நான்கு அமைச்சர்களையே நியமிக்க முடியும்.

இந்த நால்வர் தொடர்பில் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி எடுத்த தீர்மானங்களே இவை.

எனினும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்கள் சிறிது காலத்தின் பின்னர் இங்குள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க முடியும் என நான் நினைக்கின்றேன். இது தொடர்பில் எம்மால் உதவவும் முடியும் அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.

இப்போது சனத்தொகை அதிகரித் துள்ளது. வேலைகளும் அதிகரித்துள்ளன. அதனால் மாகாண சபைகளுக்கு அதிகளவு பொறுப்புகள் வழங்கப் படுகின்றன. இப்போதுள்ள அமைச்சர் களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது. அந்த அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு காலத்திலுமே சென்று பார்க்காத அமைச்சர்கள்கூட உள்ளனர்.

இதனால் இது தொடர்பில் மாற்று தீர்மானங்களை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி கவலைப்படாமல் மக்களுக்கான சேவையை செய்வது முக்கியம். ஏனெனில் மக்களே உங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட குறைந்த விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களும் உள்ளனர்.

கடந்த முறை வெற்றிபெற்று இம்முறை தேர்ந்தெடுக்கப்படாதவர்களும் உள்ளனர். இது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

இது மக்களின் வெற்றி அதன் பிரதிபலனை மக்கள் அனுபவிக்கும் வகையில் நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் செயற்பாடுகளின் நன்மையும் தீமையும் இறுதியில் கட்சியையே வந்தடையும்.

இதனைக் கருத்திற்கொண்டு வெற்றிக்களிப்பில் செயற்படாமல் மக்களுடன் நெருங்கி சேவைசெய்ய முன்வாருங்கள். அவர்கள் உங்களுக்கு விருப்பு வாக்குகளை அளித்திருந்தாலும் அளிக்காவிட்டாலும் அவர்களுக்காக சேவை செய்யத் தவறாதீர்கள்.

இது போன்று இதற்குமுன் செயற்படாத சந்தர்ப்பங்கள் தொடர்பில் எனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. கட்சிக்காக வேலை செய்வோருக்கு அநீதி இழைக்கத் தயாராக வேண்டாம்.

இதனை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். மக்கள் உங்களுக்காகச் செயற்பட்டுள்ளார்கள் விருப்பு வாக்கையும் வழங்கியுள்ளார்கள்.

மக்களின் விருப்பு வாக்கு முதலில் கட்சிக்கே கிடைக்கின்றது. கட்சி வெற்றிபெறவில்லையானால் உங்களில் ஒருவருக்கும் இந்த வாய்ப்புக் கிட்டியிருக்காது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றதால்தான் இந்தப் பதவிகள் உங்களுக்கு கிடைத்துள்ளன.

இதனை எவரும் மறக்கக் கூடாது. இந்தப் பதவியினால் தம் கட்சியிலேயே உள்ளவர்களுக்கு ஒருவர் அநீதி இழைப்பாரானால் அது கட்சிக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

இதனை மனதில் வைத்துக் கொண்டு அமைச்சர் பதவியை வகிப்பது போன்றே அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டால் அரசியல் மறந்து போகும். கட்சிக்கான எமது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவது முக்கியம்.

அமைச்சுக்களின் கடமைகளைப் போன்றே அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக வேண்டும். மக்களை நெருங்கி அவர்களுக்கு சேவைசெய்ய அனைவருக்கும் பலம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply