இந்திய படையுடன் இணைந்து எமது இனத்தை கொன்ற பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் : வினாயகமூர்த்தி முரளிதரன்
இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு மிகவும் பெரும் பங்காற்றியவர்கள் இன்று த. தே. கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும். மாகாண சபை உறுப்பினர்களுமே, அவர்களே அனைத்து அழிவுகளுக்கும் காரணம். இந்திய படை இலங்கைக்கு வந்தபோது, அதனோடு சேர்ந்து எமது இனத்தினை கொன்றொழித்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது சர்வதேச விசாரணை ஒன்றினை கோருவதற்கு? சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களையே முதன் முதலில் விசாரிக்க வேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் புனிதமானவர்கள் என்றால் அவர்கள் சர்வதேச விசாரணையைக் கோரலாம். அன்று மண்டையன் குழு என்று தங்களை அடையாளப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களை கொன்றொழித்தவர்கள் இன்று த. தே. கூட்டமைப்பென்ற பெயரில் பாராளு மன்றத்தில் ஆசனங்களை அலங்கரிக்கின் றார்கள். அரசாங்கம் என்பது மக்கள் சக்தி கொண்ட அமைப்பு யார் அரசாங்கத் திற்கு சக்தியைக் கொடுக்கிறார்களோ அவர் களுக்குத்தான் அரசாங்கம் உதவி செய்யும். அதனை விடுத்து சக்தியை கொடுக்காதவர் களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் தமிழ் மக்கள் தமது 100 வீதமான எதிர்ப்பினைக் காட்டி வருகின்றார்கள். அப்படி இருக்கும் போது எப்படி அவரிடம் சென்று உதவி கேட்க முடியும். இலங்கையிலே 4 தமிழர்கள்தான் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அதில் ஒருவனாக நான் இருக்கின்றேன். நான் பலமான அமைச்சராகத் தான் இருந்து வருகின்றேன் என்னை சிறந்த முறையில் பயன்படுத்தினால் நீங்கள் அடைய வேண்டிய அனைத்தையும் அடையலாம் என்றும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உப தலைவராக இருப்பதன் காரணத்தினால் அடிக்கடி ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவேன். அப்போது எமது பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
30 வருட காலப் போராட்டத்தில் மூன்று இனங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததன் மூலம் இன்று எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
வாழ்க்கைக்காகத்தான் நான் போராடச் சென்றிருந்தேன். ஆனால் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. இதன் மூலம் எத்தனையோ தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் தங்களது பிள்ளைகளை இழந்திருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் தற்போது விடிவு கிடைத்திருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் இன்று அமைதியான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.
நாம் ஒவ்வொருவரும் 30 வருட காலத்திற்கும் முற்பட்ட அரசியலை சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் நாம் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அத்தக் காலத்தில் தமிழர்கள் எத்தனையோ பேர் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு இன்று செயற்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply