தமிழ்நாட்டில் பா.ஜ.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பா.ஜ.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறப்பட்டுள்ளதே?.

பதில்:- அதனால்தான் மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கேள்வி:- தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இல்லையே?.

பதில்:- தமிழகத்தில் ‘மெகா’ கூட்டணியை அமைத்துவிட்டதாக பா.ஜ.க. கூறிவருகிறது. இது சந்தர்ப்பவாத கூட்டணி.

கேள்வி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்வதில்லையே?.

பதில்:- இதையேத்தான் நானும் தேர்தல் பிரசாரத்தின்போது கேட்டுவருகிறேன். இதுவரை அவர் பதில் அளிக்கவில்லை.

கேள்வி:- தி.மு.க. நீண்டகாலமாக வலியுறுத்தி வரும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லையே?.

பதில்:- பா.ஜ.க. மதவாத கட்சி என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் படம் இடம்பெற்றுள்ளது மேலும் அதை தெளிவுபடுத்தியுள்ளது.

கேள்வி:- வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறாரே?.

பதில்:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆடம்பர பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி:- தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?.

பதில்:- அதற்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேள்வி:- பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து எதுவும் இல்லையே?.

பதில்:- இதை பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்கள் நலன் பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply