தடை செய்யப்பட்டோர் பட்டியல் நிரபராதி எனக் கருதுவோர் நீதிமன்றம் சென்று நியாயம் பெறலாம்

புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்பு களுக்கும் 424 உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவு அல்ல. 2008 ம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி சேகரித்த தகவல்களின் பிரகாரமே தடை செய்யப்பட்ட அமைப்புக்களினதும் நபர்களினதும் பெயர் விவரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட முடிந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று தெரிவித்தார். பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்துள்ள போதிலும் அவர்களது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டே அந்நபர்களின் பெயர் விவரங்களும் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

தடை செய்யப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் தாங்கள் நிரபராதி என கருதும் பட்சத்தில் சட்ட திட்டத்திற்கமைய உச்ச நீதிமன்றத்திற்கூடாக தமது நியாயங்களை நிரூபிப்பதன் மூலம் பட்டியலிலிருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய மற்றும் உதவிய அமைப்புக்கள் மற்றும் நபர்களை தடை செய்துள்ளமையானது இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடல்ல. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையாகுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வடக்கைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர், இலங்கை அரசாங்கம் எதற்காக இவ்வளவு காலத்திற்குப் பின்னர் பயங்கரவாத அமைப்புக்களையும் அதில் செயற்பட்ட நபர்களையும் தடை விதிக்க வேண்டுமென கேள்வியெழுப்பியுள்ளார். அவருக்கு இது புதிதாக திடீரென எடுக்கப்பட்ட தீர்மானமல்லவென்பதனை நான் எடுத்துக்கூற விரும்புகின்றேன் எனவும் பிரிகேடியர் இதன்போது விளக்கமளித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 இன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் இத்தீர்மானத்தினை எடுத்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை சாசனத்தில் இத்தீர்மானம் உள்வாங்கப்பட்டது முதலே நாம் இது தொடர்பில் செயற்பட ஆரம்பித்து விட்டோம். மத்திய வங்கியின் உதவியுடன் கட்டம் கட்டமாக இது தொடர்பிலான தகவல் திரட்டப்பட்டன. அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தகவல்களில் பாரிய முன்னேற்றத்தினைக் காணக்கூடியதாக விருந்தது.

அதனைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி வெளியான இலக்கம் 1760/40 என்ற வர்த்த மானி அறிவித்தலில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் உதவுபவர்கள் அல்லது அமைப்புக்களை தடை செய்வது மற்றும் அவர்களுக்குரிய சொத்துக் களை பறிமுதல் செய்வது தொடர்பில் விரிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆதாரங்களின்று அமைப்புக்களையோ அல்லது தனிநபர்களையோ பயங்கரவாதச் செயற்பாட்டுடன் தொடர்புடையவையென எம்மால் குற்றம் சுமத்த முடியாது. எனவே தான் தீர ஆராய்ந்த பின்னர் பெயர் விவரங்களை வெளியிட் டுள்ளோம்.  சரியான தகவல்களையும் ஆதாரங் களையும் திரட்டு வதற்கே எமக்கு இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பட்டியலில் இடம் பிடித்தவர்கள் உயிரிழந்திருந்தாலும் வெளிநாடுகளில் வசித்தாலும் இலங்கையிலுள்ள அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது உறுதி எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply