யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை:பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்க

எத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் யுத்தநிறுத்தமொன்றை மேற் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லையென பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அழிவின் இறுதித் தருணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் எதனையும் செய்யத் துணியலாம். அதனைத் தடுப்பதற்கான நடவ டிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற இவ்வேளையில் சகல தரப்பினரினதும் பூரண ஆதரவு அவசியமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆசிர் வாதம் வழங்கும் வகையில் சில தொண்டர் அமைப்புகள் சர்வதேச ரீதியில் திரிபுபடுத்தப்பட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவதாக அவ்வமைப்புகள் பிரசாரம் செய்கின்றன. இது உண்மையெனில் தெற்கிலும், மத்திய மாகாணத்திலும் தமிழ் மக்கள் வாழ முடியுமா? அம்மக்கள் கடந்த தேர்தல்களில் அரசுக்கு வாக்களித்திருப்பார்களா எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

இரவில் விழுந்த குழியிலேயே பகலிலும் மீள விழு வதற்கு அரசாங்கம் தயாரில்லை. சில சத்திகள் மீண்டும் ஒரு யுத்தநிறுத்தம் பற்றி அழுத்தங்களைப் பிர யோகிக்கின்றன. அதை ஏற்க முடியாது. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்க்கும் போது, இன்னும் சில காலங்களுக்கு இவர்களை விட்டு வைத்திரு ந்தால் முழு நாடும் அழிவடைந்திருக்கும் என்பதையே உணர்த்துகிறது.

மீண்டும் மீண்டும் புலிகளை நம்ப அரசு தயாரில்லை. வரலாற்றில் கற்ற பாடங்களை எளிதில் மறக்க மடியாது. இதனால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் யுத்தநிறுத்தமொன் றை அரசாங்கம் புலிகளுடன் மேற்கொள்ள மாட்டாது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேசமும் செயற்படு கின்ற காலகட்டமிது. நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து, சகல மக்களும் வாழக்கூடிய ஜனநாயகச் சூழலை உருவாக்குவதற்கே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எனினும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன. இவர்கள் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் டொலர்களுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தமது மக்களைப் பணயக் கைதிகளாகவும் தற்கொலைப் போராளிகளாகவும் சிறுவர் போராளிகளாகவும் நடத்துகின்றனர். இதனால் சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் மக்களும் அவர்களை நிராகரித்துள்ளனர்.

அம்பாறைக் கிராமமொன்றில் புகுந்து புலிகள் செய்த அட்டகாசத்தால் பல உயிர்கள் பலியான சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தமது மக்களையே அழிக்கும் விடுதலை இயக்கமாக அவ் இயக்கம் செயற்பட்டு வருகிறது.

இத்தகைய நிலையிலும் புலிகளுக்கு ஆதரவாக சில தொண்டர் அமைப்புகள் செயற்படுகின்றன. யுத்தநிறுத்தம் ஒன்று அவசியமென அவை வலியுறுத்துகின்றன. ஒரு போதும் இதற்கு இடமளிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவர் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply