தான் திருமணமானவர் என்பதை பகிரங்கப்படுத்தினார் மோடி

நரேந்திரமோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயரை முதல் முறையாக குறிப்பிட்டுள்ளார்.பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் இது என்றோ பகிரங்கமாக அறிவித்தது இல்லை. குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோதுகூட அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். ஆனால் சமீபத்தில், மோடி மணமானவர், அவருக்கு 17 வயதில் திருமணமானது, அவரது மனைவி யசோதா பென் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை என தகவல்கள் வெளியாகின.

ஓய்வுபெற்ற நிலையில், அந்த பெண் தனது வாழ்வில் பெரும்பகுதியை இறைவழிபாட்டில் கழிப்பதாகவும், தனது விதி மற்றும் கெட்ட நேரத்தால்தான் மோடியுடன் இணைந்து வாழ முடியாமல் போய்விட்டதாகவும் பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில், எந்தவொரு வேட்பாளரும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் எந்தவொரு தகவலை மறைத்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ மனு நிராகரிக்கப்படும் என தேர்தல் கமிஷன் கடிவாளம் போட்டது.

மேலும், பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி வேட்புமனு தாக்கல் செய்கிறபோது, தனது திருமணம் பற்றிய தகவல்களை வெளியிட்டு, தான் தூய்மையானவர் என்பதை காட்டவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த நிலையில், வதோதரா தொகுதியில் நரேந்திரமோடி பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடுவதற்கு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவுடன் அவர் தாக்கல்செய்த பிரமாண பத்திரம், மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) அலுவலக விளம்பர பலகையில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின் ஒட்டப்பட்டது.

அந்த பிரமாண பத்திரத்தில் மனைவி பெயர் என்ற இடத்தில் ‘யசோதா பென்’ என்று நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மனைவியின் சொத்து விவரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திரமோடி, தான் திருமணம் ஆனவர் என்றும் மனைவி பெயர் யசோதா பென் என்றும் பிரமாண பத்திரத்தில் முதன்முதலாக தகவல் வெளியிட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மோடியின் திருமண விவகாரம் பற்றி அவரது அண்ணன் சோமபாய் பெயரில் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சோமபாய் கூறி இருப்பதாவது:-

எங்கள் பெற்றோர் நிறைய படிக்காதவர்கள். எங்களது குடும்பம், ஏழைக்குடும்பம். எனது பெற்றோருக்கு மற்ற குழந்தைகளை போன்றுதான் நரேந்திராவும் (நரேந்திரமோடியும்). அந்த வகையில் நரேந்திராவுக்கு இளம் வயதில் யசோதா பென்னுடன் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால் இந்த திருமணம், வெறும் சமூக சடங்காக அமைந்துவிட்டது.

நரேந்திரா, வீட்டை விட்டு பிரிந்து சென்ற பின்னர் குடும்பத்துடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.

யசோதா பென் தனது தந்தையின் வீட்டில் வசித்துக்கொண்டு, கல்வித்துறையில் பணியாற்றி தன் வாழ்க்கையை கழித்தார்.

உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையில் நரேந்திரா நம்பிக்கை வைத்திருந்ததால்தான் வீட்டை விட்டும், குடும்பத்தை விட்டும் வெளியேறினார்.

குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்பில் இல்லாததால், குடும்ப உறுப்பினர்கள் அவரைப்பற்றி அவ்வளவாக அறிய மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நரேந்திரமோடி திருமணம் குறித்த தகவலை பாராளுமன்ற தேர்தலில் தாக்கல் செய்கிற வேட்புமனுவில் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ், இப்போது அவர் வதோதரா தொகுதி வேட்பு மனுவில் திருமண தகவலை தெரிவித்திருப்பதை விமர்சித்துள்ளது.

அந்த கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் இதுபற்றி ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “மோடி திருமண நிலையை ஒப்புக்கொண்டு விட்டார். ஒரு பெண்ணை பின் தொடர்ந்து சென்றவரை, தனது மனைவியை உரிமை இழக்க செய்தவரை இந்த நாட்டு பெண்கள் நம்ப முடியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply