இன்று சென்னை வரும் நரேந்திரமோடி ரஜினிகாந்தை சந்திக்கிறார்

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று ரஜினிகாந்த் இதுவரை அறிவிக்கவில்லை. அவர் பாரதீய ஜனதாவை ஆதரிக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

நரேந்திர மோடி வருகை

ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எந்தவித கருத்தும் கூறாமல் தொடர்ந்து மவுனம் காத்துவந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வர உள்ளார். மீனம்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

ரஜினிகாந்த்துடன் சந்திப்பு

இதற்காக, மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் வரும் அவர், நேராக சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து பேசுகிறார். இதை பா.ஜனதா தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் உறுதி செய்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் வலைத்தள பக்கத்தில் மோடி–ரஜினிகாந்த் சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையானது என்று குறிப்பிட்டு உள்ளார். அதே நேரம் மோடியையும், தேர்தலையும் பிடிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். இதன் காரணமாக இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நடிகர் ரஜினிகாந்திடம் நரேந்திர மோடி கேட்கலாம் என்று தெரிகிறது.

சந்திப்புக்கு யார் காரணம்?

நடிகர் ரஜினிகாந்தை, பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசுவது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் யார்? என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது. ‘துக்ளக்’ ஆசிரியர் சோ முயற்சியின் பயனாகத்தான் இந்த முக்கியமான சந்திப்பு நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்புக்கு பின்னர், அங்கிருந்து மீனம்பாக்கம் செல்லும் நரேந்திர மோடி பிரசார கூட்டத்தில் பேசுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், தமிழகத்தில் கூடுதலான இடங்கள் பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தி.மு.க.–தமிழ் மாநில காங்கிரசுக்கு ஆதரவு

1996–ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. – தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக, டி.வி. மூலம் பிரசாரமும் செய்தார்.

அந்த தேர்தலில் தி.மு.க. – தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பிரசாரமும் முக்கிய காரணமாக கருதப்பட்டது. அதன் பின்னர், நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply