இலங்கையில் காணாமல் போனவர்கள் குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனை
இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால், இலங்கை அரசு அவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கவிருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் “படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு’வின் (எல்எல்ஆர்சி) செயலாளர் ஹெச்.டபிள்யூ. குணதாஸா இதுகுறித்து கூறுகையில், உள்நாட்டுப் போரின்போது, வடகிழக்கு மாகாணங்களில் ஒரு சில குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாக அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்க எல்எல்ஆர்சி குழு பரிந்துரைத்துள்ளது.
காணாமல் போனவர்களைப் பற்றிய ஆதாரங்களும், சாட்சிகளும் இல்லாததால் குழுவின் விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
பல குடும்பத்தினர், காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்கள் திரும்ப வந்துவிடுவார்கள் என மிகவும் நம்புகிறார்கள். அதனால் நாங்கள் அளிக்கும் இறப்புச் சான்றிதழையும், இழப்பீட்டையும் ஏற்க மறுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
1990-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி முதல், 2009-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் திடீரென காணாமல் போனவர்களைப் பற்றி எல்எல்ஆர்சி குழு விசாரித்து வருகிறது.
எனினும், இந்தக் குழுவின் பரிந்துரைகள் அமல் செய்யப்படுவதில்லை என சர்வதேச நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
கடந்த 27-ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில், விடுதலைப்புலிகளுடனான போரின்போது இரு தரப்பிலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையமே விசாரிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், அத்தகைய விசாரணை இலங்கையின் இறையாண்மையைக் குலைப்பதாக அமையும் எனவும், அவ்வாறு விசாரணை நடைபெற்றால் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் எனவும் இலங்கை தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply