96 பேருக்கு எதிராக இன்டர்போல் அபாய அறிவிப்பு நெடியவன், விநாயகம் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கம்

புலி சந்தேகநபர்கள் உட்பட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடாக ‘அபாய அறிவிப்பு’ (Red Notice) விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

புலி சந்தேகநபர்கள் 40 பேரும், கொலை, போதைப்பொருள் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டுவரும் 56பேரும் இந்த அபாய அறிவிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

புலி உறுப்பினர்களான விநாயகம், நெடியவன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெளிநாடு களில் வாழும் இலங்கையர்களுக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவர்களை இன்டர்போலின் உதவியுடன் வெளிநாடு களிலிருந்து கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட நாடுகளில் அவர்கள் இருந்தால் கைதிகளைப் பரிமாற்றும் திட்டத்தின் கீழ் அவர்களை இலங்கைக்கு அழைத்துவர எதிர்பார்த்திரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், 2012ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் தமிழ்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கைக்குக் கொண்டுவருவது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 44 பேர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த மார்ச் 5ஆம் திகதி பளை பிரதேசத்தில் பயங்கரவாதத்தை மீண்டும் ஊக்குவிக்கும் வகையிலான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்ட முயற்சித்த இருவர் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளில் எல்.ரி.ரி.ஈயின் உள்நாட்டுத் தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேடுதல்களின் போது 67 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதுடன் 44 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 37 ஆண்களும், 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை தேடி நடத்தப்பட்ட தேடுதல்களின் போது மோட்டார்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணிவெடி கண்டறியும் கருவிகள் 3 உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்ணிவெடி அகற்றும் அமைப்பொன்றிலிருந்து காணாமல்போன 5 கண்ணிவெடி கண்டறியும் கருவிகளில் 3 கருவிகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத செயற்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கும் நோக்கில் இவர்கள் செயற்பட்டார்கள் என்பது தெளிவாகப் புலனாகியுள்ளது. வடக்கிலுள்ள 99 வீதமானவர்கள் மீண்டுமொரு பயங்கரவாத சூழ்நிலை ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அதேநேரம், கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக கெப்பிட்டிகொல்லாவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சுட்டுக்கொல்ல ப்பட்டவர்களின் சடலங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மேலதிக சாட்சிகளை வழங்க விரும்புபவர்கள் கெப்பிட்டிகொல்லாவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் மீண்டும் புத்துயிர் பெறாமல் தடுப்பதற்கான பொறுப்பு பொலிஸாருக்கும், பாதுகாப்புத் துறைக்கும் இருப்பதால் அதற்கு அமைய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply