தேர்தலுக்கு பிறகு தி.மு.க. ஆதரவு குறித்து பரிசீலிப்போம்: சசிதரூர்

தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் ஆதரவு தேவைப்பட்டால் பரிசீலிப்போம் என்று சென்னையில் மத்திய மந்திரி சசிதரூர் கூறினார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சசிதரூர் நேற்று சென்னை வந்தார். தென்சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமணியை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த அவர், முன்னதாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ரூ.4 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளை எதிரி நாடாக கருத முடியாது. அதே நேரத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் அந்நாட்டு அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை தொடர்ந்து மத்திய அரசு செய்து வருகிறது.

கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு பிறகு இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்சினை இருப்பது உண்மைதான். எல்லைகளை கடந்து மீன்பிடிப்பதில் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதெல்லாம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

தி.மு.க.விடம் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆதரவு கோருமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த கட்சிகள் எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுகின்றன என்பதை கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் தி.மு.க.விடம் ஆதரவு கேட்பது குறித்து பரிசீலிப்போம்.

தற்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் நல்ல வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். தனியாக வாக்கு வங்கி எவ்வளவு உள்ளது என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் சாமானிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அடுத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அந்தத்திட்டங்களை எல்லாம் தொடருவார்களா? என்பது சந்தேகம் தான். ஏனென்றால், சாதாரண மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.

குஜராத் மாநிலத்தில் 3 மந்திரிகள் மீது ஊழல் புகார் இருந்தும் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் அரசில் மத்திய மந்திரிகள் மீது ஊழல் புகார் வந்தால் உடனடியாக அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். குற்றமற்றவர் என்று நிரூபித்த பிறகே அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் சீக்கியர்கள் கலவரம் நடந்தபோது ராகுல்காந்திக்கு 12 வயதுதான் ஆகியது. அதனால், இந்த சம்பவத்திற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், குஜராத் கலவரம் நடந்தபோது, அம்மாநில முதல்-மந்திரியாக நரேந்திரமோடி தான் இருந்தார். எனவே, அவர் அந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நரேந்திரமோடி அலை ஒன்றும் இல்லை. சிற்றலை கூட இல்லை. அப்படி அவருக்கு அலை இருந்தால் ஏன் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள் எல்லாம் அவர் பக்கம் இருக்க நினைக்கிறார்கள்.

இவ்வாறு மத்திய இணை மந்திரி சசிதரூர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply