தென் கொரிய கப்பல் விபத்து இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 268 பேரை காணவில்லை!

தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு மிகப்பெரிய சொகுசு கப்பல் ஒன்று கடந்த 15 ஆம் தேதி புறப்பட்டது. அதில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். ஆனால், புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் அந்த கப்பல் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தை நெருங்கிய போது, கப்பல் உடைந்து மூழ்கிக் கொண்டிருந்தது. மாயமானவர்களை மீட்கும் பணியில், 169 படகுகளும், 29 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 268 பேரை காணவில்லை.

கடல் சீற்றம், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும், நீச்சல் வீரர்கள் 500 பேர் காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், கப்பல் எப்படி மூழ்கியது என்பது குறித்து கப்பல் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. அந்த கப்பலில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விபத்திற்கு காரணமான கப்பலின் கேப்டனை கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இந்நிலையில், ‘கப்பல் நிர்வாகம்’ விபத்திற்கான ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்பதை மேற்கோள் காட்டியுள்ள தென் கொரியாவின் மோக்போ உள்ளூர் நீதிமன்றம், விபத்திற்குள்ளான கப்பலின் கேப்டன் லீ ஜூன் சியோக் மற்றும் அவரது பணிக்குழுவில் இருந்த 2 உதவி கேப்டன்களையும் கைது செய்ய வாரண்ட்களை பிறப்பித்தது.

இதையடுத்து, கேப்டன் லீ கைது செய்யப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் மீது பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தென் கொரியாவின் யான்ஹேப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பல் விபத்திற்குள்ளானதற்கு முன்பாகவே கேப்டன் லீ தனது பொறுப்பை மூன்றாவது உயர் அதிகாரியின் கையில் ஒப்படைத்து விட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply