கருணாநிதி கைகாட்டக்கூடியவர் தான் பிரதமர் ஆவார்: மு.க.ஸ்டாலின்
தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். சோழவந்தான், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்து விட்டு, பிற்பகல் 12.40 மணியளவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை முன்பு பிரசாரம் செய்தார். பின்னர் தேனி பங்களாமேடு, தேனி அல்லிநகரம், பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். தேனி பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தேனி தொகுதியில் பிரசாரம் செய்ய ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் வந்து ஹெலிகாப்டரில் திரும்பிச் சென்றார். கூட்டத்தில் சில தவறான தகவல்களை ஜெயலலிதா சொல்லியுள்ளார். அவருடைய பிரசாரத்திற்கு வந்தவர்கள் கூட்டப்பட்ட கூட்டம். ஆனால் இங்கு இருப்பவர்கள் தானாக வந்த கூட்டம். கலைஞர் கை காட்டக்கூடியவர் தான் நாட்டின் பிரதமராக வருவார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கருணாநிதி துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார். துரோகத்தை பற்றி அவர் பேசுகிறார்.
கடந்த 1979-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 156 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து இருந்தார். அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து எடுத்துக்கூறி ஜெயலலிதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இதற்கு அவர் பதில் கூற வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பு அளித்த போது அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. அப்போது தீர்ப்பை நிறைவேற்றாததற்கு காரணம் என்ன? அதை விட்டு விட்டு தி.மு.க. மீது குறைகூறுவது எந்த வகையில் நியாயம்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கலைஞர் என்னவெல்லாம் அக்கறை எடுத்துக்கொண்டார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. 1989-ம் ஆண்டு நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த காரணம் கருணாநிதி தான். 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தான் அணை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2000-ம் ஆண்டு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த மத்திய நிபுணர் குழுவை அமைத்தது தி.மு.க. ஆட்சியில் தான்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து கேரள முதல்-மந்திரியாக இருந்த அச்சுதானந்தனை சந்தித்து கலைஞர் பேசினார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நீதி கேட்டவர் கலைஞர்.
அதுமட்டும் இல்லை, 1956-ல் பேரறிஞர் அண்ணா வைத்த கோரிக்கை போல, முல்லைப் பெரியாறு அணை இருக்கக்கூடிய பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் கலைஞர்தான். ஆனால் இதை எல்லாம் மூடி மறைத்து, மக்களிடையே தவறான பிரசாரம் செய்ய வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதே தேனிக்கு வந்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கருணாநிதி துரோகம் செய்து விட்டார் என்று கூறியுள்ளார். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply