இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸை நம்ப முடியவில்லை : கருணாநிதி
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நம்ப முடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. எம்ஜிஆர் ஆதரவு தெரிவித்தார். பிறகு திமுகவும் ஆதரவு தெரிவித்தது.
இலங்கையைத் தொடர்ந்து, தமிழகத்திலும் விடுதலைப்புலிகள் பலம் பெற்றனர்.
இப்போது முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் போலவும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அக்கறை உள்ளவர் போலவும் பேசி வருகிறார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் கைது செய்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதாதான் தீர்மானம் நிறைவேற்றினார்.
இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது, “போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்´ என்றும் ஜெயலலிதா கூறினார்.
போரில், பொதுமக்களைக் கேடயமாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார். இப்படி விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்பட்ட ஜெயலலிதா, அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதை தமிழகத்தில் உள்ள சிலரும் நம்புகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் பிரபாகரன் மற்றும் எண்ணற்ற தமிழர்கள் மாண்டு விட்டனர். அதற்குப் பிறகாவது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஓர் விடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடி வருகிறோம்.
டெசோ அமைப்பு மூலம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உலக அரங்கில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக அழுத்தம் கொடுத்து வருகிறோம். காங்கிரஸ் அரசாவது அவர்களைக் காப்பாற்றும் என்று நினைத்தோம்.
ஆனால், காங்கிரஸூம் கைவிட்டு விட்டது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியையும் நம்ப முடியவில்லை. அதன் காரணமாகவே காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினோம்.
எனவே, சிறு பதவிகளைப் பெறுவதற்காக இந்தத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்கவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றார் கருணாநிதி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply