தாயகத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை

தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக அனைவரும் அர்ப்பணி ப்புடன் செயற்பட வேண்டு மென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையிலான கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள ஈஸ்டர் பண்டிகைச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: திரு வழிபாட்டு வருடத்தின் மாபெரும் திருவிழாவான உயிர்ப்பு விழாவில் மரணத்தையும், பாவத்தையும் வென்ற நம் ஆண்டவரும் மீட்பருமான நசரேத்தூர் இயேசுவின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

வான தூதர்களின் செய்தி எம் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதாக உயிர் வாழ்பவரை ஏன் இறந்தவர்கள் நடுவில் தேடுகிறார்கள்? அவர் இங்கு இல்லை. ஆனால் அவர் உயிர்த்து விட்டார் (லூக் 24 : 5). இவ் வருடம் இம்மகிழ்ச்சியின் எடுத்துரைப்பின் போது எமது உலக ஆயரான திருத்தந்தை பிரான்சிஸ் எம்மை மனித இனம் முகங்கொடுக்கும் சிலுவை மற்றும் துன்பங்களை உணர்ந்து செயற்படுமாறு அழைப்பதையும் நாம் மனதிற் கொள்வோம். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவரோடு உலக திருச்சபை யிலுள்ள நாம் அனைவரும் கொள்ள வேண்டிய ஒற்றுமையின் மகிழ்ச்சியை கிறிஸ்துவில் விசுவாசிப்போர் என்ற ரீதியில் நாம் கொண்டிருக்க வேண்டும் என திருத்தந்தை வலியுறுத்துவதை நாம் மறவாதிருப்போம்.

கிறிஸ்துவில் எமது விசுவாசம் எமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற மாபெரும் கொடை என்பதையும் மேலும் உயிர்ப்புக் கொண்டாட்டம் இவ்விசுவாசத்திற்காக கடவுளுக்கு நன்றி கூறும் உன்னத நிகழ்வு என்பதையும் நாம் மனதிற் கொள்வோமாக.

கடவுள் தம் ஒரே பேறான மகன் மீதான விசுவாசத்தை எமக்கு தந்தையிட்டு மகிழவேண்டும். அதேபோல இவ்விசுவாசத்தை எமக்கு கையளிப்பதில் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம். உயிர்ப்பின் மகிழ்ச்சிக் காலத்தில் உயிர்த்த மீட்பரான கிறிஸ்துவைப் பற்றிய அறிவை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவோம். மேலும் அவர் எம் மத்தியில் இருக்கின்றார் என்ற உள் உணர்வையும் புதுப்பித்துக் கொள்வோம்.

எமது வாழ்க்கைப் போராட்டத்தின் போது அவர் எம்மோடு இருக்கின்றார். பயணிக்கின்றார் என்ற நம்பிக்கை எமக்கு வலுவூட்டி நிற்பதை நாம் காண்கின்றோம். மேலும் இந்த உயிர்ப்பின் விழா ஆண்டவர் இயேசு தம் மந்தையைக் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையின் விழாவாகவும் இருக்கின்றது.

இம் மகிழ்ச்சியின் காலம் அவர் எமது வாழ்க்கையில் என்றும் எம்மோடு இருக்கின்றார் என்பதை புரிந்துகொள்ளத் தூண்டுகின்றது. உயிர்த்த ஆண்டவர் தமது சீடர்களுக்கு தோன்றிய பொழுது சமாதானத்தைக் கொடையாக வழங்கினார். உண்மையான அமைதி கடவுளோடு நாம் இணைந்து இருப்பதால் ஏற்படும் அமைதியாகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது நாட்டிற்கும் தேவைப்படுவது இப்படிப்பட்ட அமைதியே ஆகும். நாம் எமது நாட்டில் அபிவிருத்தியின் வளர்ச்சியைக் கண்டாலும் ஒன்றுமை மற்றும் ஒப்புரவுக்கான ஆக்கபூர்வமான வழிகளில் எம் தாய் நாட்டில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

அனைவரும் ஒருவர் ஒருவரது மாண்பைக் பாதுகாத்து நடப்பதன் மூலமே இதைப் பெறமுடியும். மேலும் இது நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது. இதற்காக நாம் பல பரித்தியாகங்களையும் செய்ய வேண்டும்.

உண்மையான அமைதியை நாம் ஏற்படுத்த தேவையான சக்தியைக் கேட்டு செபிப்பதோடு இத்தீர்மானத்தில் நிலைத்து நின்று மாண்புடன் கூடிய அமைதியை ஏற்படுத்தி எம்மாலான அனைத்து செயற்பாடுகளையும் செய்ய தலைப்படுவோம்.

அமைதியின் கொடைக்காக மகிழ்ந்து கடவுளுக்கு நன்றி கூறும் அதேவேளை அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களையும் மனதிற் கொள்வோம். தேவையில் உழல்வோரில் இயேசுவின் முகத்தைக் காண எமது கிறிஸ்தவ சீடத்துவம் எம்மை அழைப்பதை நாம் மறந்துவிடலாகாது.

உயிர்ப்பின் மகிழ்ச்சி இந்த கிறிஸ்தவ சீடத்துவத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் புரிந்துகொள்ள எம்மைத் தூண்டிவிட வேண்டும். எமது நாட்டிலும் எமது தனிப்பட்ட வாழ்விலும் உண்மையான சமாதானத்தை உய்த்துணர எம் எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதாக என அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply