காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை கிடைத்ததும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம்

காணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொரிய நாட்டின் விசேட தூதுக் குழுவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கொரிய விசேட தூதுவரும் அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மியுங் ஹ்வான் தலைமையிலான தூதுக் குழுவினருடன் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அபிவிருத்தியில் தெற்கை விட வடக்கிற்கே முன்னுரிமையளித்துள்ளதாகவும் வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கொரிய தூதுக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை அனைத்துத் துறைகளிலும் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக கொரிய நாட்டின் விசேட தூதுவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மி யூங் ஹ்வான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகமயப்படுத்தியமை மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மிகத் துரிதமாக மீளக் குடியேற்றியமை என்பவற்றை யுத்தத்திற்குப் பிற்பட்ட காலத்தில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு இரண்டு உதாரணங்களாக மியுங் ஹ்வான் எடுத்துக் காட்டியுள்ளார்.

முதலாவது வட மாகாண சபைத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தியமை பற்றியும். காணாமற் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக் குழு அமைக்கப்பட்டது தொடர்பாகவும் அரசாங்கத்துக்குப் பாராட்டு உரித்தாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கால நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதற்காக தாம் ஆணைக் குழு அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். வட மாகாணத்திற்கு விஜயம் செய்யும்படி ஜனாதிபதி அவர்கள் கொரிய விசேட பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.

அபிவிருத்தியின் போது நாம் தெற்கைவிட அதிக முன்னுரிமை வடக்கிற்கு அளித்துள்ளோம் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அப்பிரதேசத்திற்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தியை நேரில் காண்பது முக்கியம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கையுடன் ஒத்துழைப்பையும் வலுவான இருதரப்பு உறவுகளையும் பேணுவதற்கு தமது அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதை மியுங்க் – ஹ்வான் மீண்டும் வலியுறுத்தினார். அபிவிருத்திக்காக இலங்கை அரசுக்கு ஆகக் கூடிய உதவியை செய்ய கொரியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்னவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply