திமுக கூட்டணி வெற்றிக்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை தமிழகத்திலே பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, இமையசைக்காமல் காப்பாற்றி, களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து, உழைத்த உழைப்புக்கான அறுவடையை காணக்கூடிய நாள்.

நேற்று மாலையோடு ஒலிபெருக்கி வாயிலாக பிரசாரம் செய்வது முடிந்து விட்டது. நமது கட்சியின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் க.அன்பழகனும் வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எங்களால் முடிந்த அளவுக்கு காரிலும், வேனிலும் பயணம் செய்து பிரசாரம் செய்திருக்கிறோம். இந்த தேர்தல் பிரசாரத்தில் 90 வயதை கடந்தும் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே நானும், க.அன்பழகனும், கேரளத்தில் அச்சுதானந்தமும்தான் என்று பத்திரிகைகளே சுட்டிக்காட்டியிருந்தன.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமிழகம் முழுவதிலும் ஒரு தொகுதி பாக்கியில்லாமல், வேனிலேயே பயணம் செய்து பிரசாரம் செய்திருக்கிறார். இந்த தேர்தலில் அவருடைய பிரசாரம் பற்றி பாராட்டி எழுதாத ஏடுகளே இல்லை.

தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களுக்காக ஆற்றிய பணிகள், சாதனைகள் பற்றியும்; அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள், அவலங்கள் பற்றியும், ஒவ்வொரு கூட்டத்திலும் திரண்டு வந்த மக்களிடையே எளிதில் புரியும் வண்ணம் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் விளக்கி சொன்னார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கெல்லாம் அவ்வப்போது ஆணித்தரமாகவும், ஆதாரங்களுடனும் பதிலளித்திருக்கிறார்.

நான் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கட்சி தோழர்கள் ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்பதை பற்றி விரிவாக கூறியிருந்தேன். எனவே கட்சி தோழர்கள் அனைவரும் அந்த அடிப்படை இலக்கணத்தை மனதிலே கொண்டு, தங்களால் குறைந்தபட்சம் ஒரு வாக்கு, அதற்கு மேல் எத்தனை வாக்குகளை வேண்டுமானாலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அளித்திடவும், நமது வேட்பாளர்கள் அனைவரும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிடவும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று எந்த காரியத்தையும் செய்திட துடித்துக்கொண்டிருப்பதால், நமது கூட்டணியின் வேட்பாளர்களுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள முகவர்கள் (ஏஜெண்டுகள்) கண்ணும், கருத்துமாகவும் மிகுந்த எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் உரிய இடத்திற்கு எடுத்துச்செல்லப்படும் போதும், அவை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்படும்போதும், மிகவும் விழிப்பாக இருந்திட வேண்டும். கவனம், கவனம். கடந்த சில நாட்களாக சுறுசுறுப்பாக பணியாற்றி விட்டு, கடைசி 2 நாட்களில் ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கை தேவை; வெற்றி நமதே.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply