வவுனியா நிவாரண கிராமங்களிற்கு வெளிநாட்டு தூதுவர்கள் விஜயம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று நேற்று விஜயம் செய்து பார்வையிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்கள் மற்றும் வைத்தியசாலைகல் என்பவற்றுக்குச் சென்று மக்களை சந்தித்து நலன் விசாரித்ததோடு, அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்ததாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விசேட விமானம் மூலம் பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதுவர்கள் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹனவும் உடன் சென்றிருந்தார்.

மெனிக்பாம், காமினி வித்தியாலயம், காதிர்காமர் கிராமம் மற்றும் வவுனியா வைத்தியசாலை என்பவற்றுக்குச் சென்று அங்குள்ள மக்களினதும் நோயாளிகளினதும் நிலைமைகளை இவர்கள் அவதானித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடியதோடு அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தனர். வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.

வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

வெளிநாட்டு தூதுவர்களின் விஜயத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply