‘புளொட்’ அமைப்பு துணை இராணுவ அமைப்பு அல்ல : தர்மலிங்கம் சித்தார்த்தன்

புளொட் அமைப்பு துணை இராணுவ அமைப்பு அல்ல என அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் முன் கடந்த வாரம் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஹெனா நொய்ஸ்ஹார்ட் தாக்கல் செய்த அறிக்கையொன்றில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் துணை இராணுவ குழுவினர் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வவுனியாவில் தங்கியுள்ள முகாம் ஒன்றில் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சித்தார்த்தன் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆய்வாளருக்கு ஹெனா நொய்ஸ்ஹார்ட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்க செனட்டின் வெளியுற குழுவிடம் சமர்பித்த அறிக்கை தொடர்பான கட்டுரை ஒன்று கடந்த இரண்டாம் திகதி இலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையை படித்த தான் ஆச்சரியமடைந்தாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி வவுனியா மருத்துமனைக்கு சென்ற ஹெனா, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயளர்கள் தங்கியுள்ள மகபேறு விடுதி உட்பட பல விடுதிகளுக்கு சென்று மக்களை செவ்வி கண்டுள்ளார். இந்த விடயம் குறித்து தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனவும் ஹெனா ஒரு நேர்மையான சிறந்த இளம் நபர் என தாம் நம்புவதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் புளொட் அமைப்பின் துணை இராணுவத்தினர் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம் ஒன்றில் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து தம்மை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக சித்தார்தன் கூறியுள்ளார். அவரின் இந்த அறிக்கை உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க தம்மை அங்கு அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் தாம் தொடர்ந்தும் அனுமதி கேட்டு வருவதாகவும் இதுவரை அந்த அதற்கான அனுமதி புளொட் அமைப்புக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply