தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவாத்ரா மற்றும் அவரது அமைச்சில் இருக்கும் பல அமைச்சர்களையும் பதவி விலகும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவாத்ரா மற்றும் அவரது அமைச்சில் இருக்கும் பல அமைச்சர்களையும் பதவி விலகும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவரை பிரதமர் யிங்லுக் இடமாற்றம் செய்தது சட்டவிரோதமானது என்று அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தாய்லாந்தில் கடந்த பல மாதங்களாக அரசியல் பதற்றம் நீடிக்கும் நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் யிங்லுக்கை பதவி கவிழ்க்க முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“காபந்து அரசின் பிரதமராக நிவட்டும் ரொங் பூம்சொங்பெய்சாவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று துணை பிரதமர் பொங்தெப் தெப்கன்ஜானா குறிப்பிட்டார்.

யிங்லுக் கடந்த 2011ம் ஆண்டு அப்போது தேசிய பாதுகாப்பு தலைவராக இருந்த தவில் பிளின்சிரியை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இடமாற்றம் செய்ததாகவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான யிங்லுக் தன்மீதான குற்றச்சாட்டை நிராகரித்தார். எனினும் இந்த வழக்கில் நீதிமன்றம் பிரதமருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த இடமாற்றத்தின் மூலம் யிங்லுக்கின் உறவினர் நன்மை பெற்றிருப்பதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யிங்லுக்கின் பிரதமர் அந்தஸ்து முடிந்துவிட்டது. அவரால் தொடர்ந்து காபந்து அரசுக்கு பிரதமராக செயற்பட முடியாது” என்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடமாற்ற விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டி மேலும் ஒன்பது அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக பிரதமரின் ஆலோசகர் நொபட்டோன் பட்டாமா குறிப்பிட்டுள்ளார். “நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறும் நிலையில் அவரால் தீர்ப்பை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை. இருப்பினும் நாம் அரசியல் ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசு உருவாகும்வரை எஞ்சியிருக்கும் அமைச்சர்கள் தமது பணியை தொடர்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். யிங்லுக்கின் அரசுக்கு தலைநகருக்கு வெளியில் பெருமளவு ஆதரவு இருக்கும் நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஆதரவாளர்களுக்கு இடையில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் தலை நகரில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நகரின் பல பகுதிகளும் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் யிங்லுக் கடந்த பெப்ரவரியில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த போதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் இடையூறால் இந்த தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. இந்நிலையில் நகரில் இயங்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் பக்கம் நின்று நீதிமன்றம் பக்கச்சார்பாக செயல்படுவதாக யிங்லுக் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு யிங் லுக்கின் சகோதரரும் பிரதமருமாக இருந்த தக்சின் சினவாத்திரா இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் தாய்லாந்தில் அரசியல் பதற்றம் நீடிக்கிறது. நகர்புர மத்திய தர குடும்பத்தினர் தக்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தக்சினின் அரசியல் கொள்கைகளுக்கு நகருக்கு வெளியில் பாரிய மக்கள் ஆதரவு உள்ளது. இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் இடம்பெற்ற இரு தேர்தல்களிலும் தக்சினின் கூட்டணி அரசே வெற்றிபெற்றது. இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டும் தேர்தல் மோசடியில் ஈட்டுபட்டதாக குற்றம்சாட்டி தக்சினின் கூட்டணியை நீதிமன்றம் தடை செய்து எதிர்க்கட்சி ஆட்சி அமைக்க அனுமதி அளித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply