கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு மே மாதம் 15 விதிமுறைகளை வழங்கியது. இந்த விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கியிருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். புகுஷிமாவில் நிகழ்ந்தது போன்ற பேரிடர் கூடங்குளத்திலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது அது மிகவும் பெரிய அளவில் அழிவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்றும் அவர் கூறினார்.

இந்திய அணுசக்தி கழகத்தின் இயக்குனர் டாக்டர் அஷோக் சவுகான், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும், கூடங்குளம் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து எவ்விதமான அச்சமும் தேவையில்லை என்றும் கூறினார்.

அங்கு 90 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டன என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்த அனைத்து வழிமுறைகளும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. பல வழிமுறைகள் அங்கு கடைப்பிடிக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியதற்கு இதற்காக கள ஆய்வு மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அரசுத்தரப்பில் கூறப்பட்டது.

கூடங்குளத்தில் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அணுஉலைக்கு எதிரான செயல்பாட்டாளர்களே என்றும் அவர்கள் எந்த வகையான வன்முறை செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் ஆனாலும் அவர்களின் மீதான வழக்குகளை அரசாங்கம் இன்னும் வாபஸ் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் மனுதாரர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு தமிழக அரசு சார்பில் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட 349 வழக்குகளில் 248 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்ச்சேதம், பொருட்சேதம், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைத்தல் ஆகியவற்றுக்கு பொறுப்பான 101 நபர்களின் மீதான வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர்களின் மீதான வழக்கை நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூடங்குளத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன் மற்றும் இந்திய அணுசக்தி வாரியத்தின் தலைவர் டாக்டர் அசோக் சவுகான் ஆகியோரைக்கொண்ட குழுவை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரசாந்த் பூஷண் முன்வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த 5-ந்தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள அணுஉலை எதிர்ப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply