வவுனியாவில் மீண்டும் கடத்தல் மற்றும் கப்பம் கோரல் அதிகரிப்பு.

வவுனியாவிலுள்ள அரச வங்கியொன்றின் சிரேஷ்ட அதிகாரியொருவரும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கப்பம் கோரி கடத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த அரச வங்கி நேற்று மூடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இந்த வங்கிக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. எவராவது இருவரை வவுனியா நகரில் குறிப்பிட்டதொரு பகுதிக்கு வருமாறு அவர்கள் அழைத்துள்ளனர்.

இதையடுத்து, வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவரும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

நீண்டநேரமாக இருவரும் திரும்பி வராததால் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வங்கி ஊழியர்கள் சிலர் சென்று பார்த்தபோது, வங்கியிலிருந்து சுமார் அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பற்றியும் எதுவித தகவலும் கிடைக்காது போகவே இது குறித்து வங்கி ஊழியர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், வங்கித் தலைமையகத்திற்கும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அன்றிரவு கடத்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரியின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் இருவரையும் விடுதலை செய்வதாயின் பெருந்தொகை பணம் வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளனர்.

தங்களிடம் பணம் இல்லையெனவும் இருவரையும் விடுவிக்குமாறும் குடும்பத்தவர்கள் கூறவே, வங்கிப் பணத்திலிருந்து தாங்கள் கேட்கும் தொகையை தருமாறும் இல்லையேல் மோசமான நிலையேற்படுமெனவும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

நேற்றுக் காலையும் கடத்தல்காரர்கள் அந்த அதிகாரியின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கப்பப் பணத்தை உடனடியாகத் தர வேண்டுமென மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம், நேற்று மேற்படி அரச வங்கி மூடப்பட்டேயிருந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வவுனியாவில் மீண்டும் கடத்தல் மற்றும் கப்பம் கோரல் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply