ஏமனில் அதிபர் மாளிகையை தாக்கிய போராளிகள்
ஏமன் நாட்டில் செயல்பட்டுவரும் அல்கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் தீவிரவாதிகள் அந்நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவவேண்டும் என்ற எண்ணத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சமீப காலமாக தலைநகரில் செயல்பட்டுவரும் அயல்நாட்டுத் தூதரகங்களின் அலுவலர்களைக் கடத்துவதையும், கொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள அரசின் ராணுவத்துருப்புகள் வியாழன் அன்று இரவு தலைநகரில் அல்-ஷபாப் தளபதிகளில் ஒருவரான அல்-ஷப்வானியை சுட்டுக் கொன்றனர்.
இதற்கு பதிலடியாக போராளிகள் நேற்று தலைநகரில் உள்ள அதிபரின் மாளிகையைத் தாக்கியுள்ளனர். அதிபர் மாளிகையின் பிரதான கதவுக்கருகில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த சண்டைக்குப்பின்னர் தலைநகருக்கு வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டு சோதனைச் சாவடிகள் மூலம் கண்காணிப்பு நடைபெற்றது. இந்த தாக்குதல் குறித்து எந்த மூத்த அதிகாரியும் அறிக்கை வெளியிடவில்லை.
நாட்டின் மற்றொரு பிராந்தியத்தில் உள்ள புலனாய்வுத்துறை அலுவலகம் அருகில் குண்டு ஒன்று வெடித்ததாகவும், அதன் காரணம் தெரியவில்லை என்றும் பத்திரிகை செய்தி வெளியானது. அதேபோல் ஷப்வா மாகாணத்தில் காரில் பயணம் செய்துகொண்டிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது நசிர் அஹமது மீது நடைபெற்ற கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
சந்தேகத்திற்கிடமான ஆயுதமேந்திய போராளிகளால் அவரது வாகனம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும், பின்னர் வெளியான இணையதளச் செய்தியில் அவரது காருக்கு அருகில் கேட்ட சப்தங்கள் கொண்டாட்ட துப்பாக்கிசூடு என்று கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply