சமூகத்தை உலுக்கியெடுக்கும் கலாசார சீரழிவின் உச்சக்கட்டம்

யாழ்ப்பாணத்திலே உருவான உயர்வான தமிழர் கலாசாரம், பண்பாடு, உபசரிப்பு, ஒற்றுமை எல்லாவற்றுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது ஒவ்வொ ருவர் மனங்களிலும் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளே! அதுவும் தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான துர்நடத்தைகள், உறவு முறைகளுக்கிடையேயான கொலைச் சம்பவங்கள், வேலியே பயிரை மேய் வது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான செய்திகள் உலகெங்கிலும் வாழ்கின்ற முழுத்தமிழ்ச் சமூகத்தையும் முகஞ்சுளிக்க வைத்துள்ளது.

இந்தக் கலாசார சீரழிவின் உச்சக்கட்டம் கடந்த வாரம் அச்சுவேலியில் அரங்கேறியிருக்கின்றது. தனது மூன்று சொந்த இரத்த உறவுகளை துடிக்கப் பதைக்க வெட்டிக் கொன்ற இந்தச் சம்பவமானது முழுத் தமிழ்ச் சமூகத்தையுமே ஒரு தடவை உலுக்கி எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இத்தகைய வாள் வெட்டு மற்றும் கத்திக் குத்துச் சம்பவங்கள் இடம்பெறுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது கல்வியறிவில் பின்தங்கிய கூலித் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் அவர்களது அறியாமையினால் ஏற்படுவது. ஆனால் இது நகரின் மையப் பகுதியில் அதுவும் உயர் தொழில் பார்க்கும் குடும்பத்தில் இவ்வாறு நடந்துள்ளது. இதற்கு முன்னர் வடக்கில் பல தற்கொலைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்த செய்திகள் வெளியாகியே உள்ளது. ஆனால் இது போன்ற ஈவிரக்கமற்ற கொலைச் செய்தியை நாம் அறியவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதை நாம் உனடியாகவே ஆராய வேண்டும். இன்று செய்தித்தாள்களிலும் இணையத்தளங்களிலும் வெளியாகும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது வடக்கில் அவை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதனையே அவதானிக்க முடிகின்றது. அண்மையில் குருநகர் பகுதியில் இடம்பெற்ற ஓர் இளம் பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் எது எனக் கண்டறிய முன்னர் இந்த முக்கொலை இடம்பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத் தமிழரின் உயரிய நற்பழக்க வழக்கங்களைப் பார்த்துத் தம்மை மாற்றிக் கொள்ளக் கற்க வேண்டும் என்று ஏனைய பிரதேச மக்கள் விரும்பியதுண்டு. ஆனால் இன்று அதே யாழ்ப்பாணத்தில் நடப்பவற்றைக் கேட்டால் அப்பகுதிக்குச் சென்று வந்தாலே தீட்டு என்பதாக நிலைமை மாறியுள்ளது. கோயில், குளம், என்று பண்பாட்டு விழுமியங்களுடன் மிளிர்ந்த யாழ்ப்பாணம் இப்போது பீச், ஹோட்டல், லொட்ச் என்று களியாட்டப் பிரதேசமாகிவிட்டது மட்டுமல்லாது கொலைகளுக்கும், வன்புணர்வுகளுக்கும் செய்தி சொல்லும் இடமாகவும் மாறியுள்ளது.

இதில் யாரையும் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் பெற்றுத் தருகிறோம் என வீரவசனம் பேசி ஆயுதங்களுடன் புறப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்ற சொத்துத்தான் இவை. அவர்கள் எதையுமே பெற்றுத் தராவிட்டாலும் இந்தப் பெயரையாவது அம்மக்களுக்குப் பெற்றுக் கொடுக்காது விட்டிருக்கலாம். ஆயுதமுனையில் பன்னெடுங்காலமாக மக்களைக் கட்டிப் போட்டதன் வெளிப் பாடாகவும் இவை இருக்கலாம்.

கல்வியில் அநீதி இழைக்கப்படுகிறது எனக் கூறி ஆரம்பமான போராட்டம் இன்று கலாசாரத்தில் பேரழிவைக் காணுமளவிற்கு அந்தச் சமூகத்தைக் கொண்டு சென்றுள்ளது. புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர்தான் இச்செயல்கள் வெளியுலகிற்குத் தெரிய வருகிறது. அப்படியாயின் இவை இவ்வளவு காலமும் வெளிவராமல் நடந்துள்ளதாக எனும் கேள்வியும் எழத்தான் செய்கின்றது.

எது எவ்வாறிருப்பினும் சிறந்த கல்வியறிவும், கலாசார பண்பாடும் கொண்ட யாழ்ப்பாண சமூகத்திலிருந்து இவ்வாறான கலாசார சீர்குலைவுச் செய்திகள் வெளிவருவது ஒட்டுமொத்தமாக அப்பிரதேச மக்கள் அனைவருக்கும் அவப் பெயரை ஏற்படுத்துகிறது. எனவே இதற்குக் காரணமான சக்திகளை அல்லது தனி நபர்களைக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன்னால் நிறுத்துவது அனைவரதும் தலையாய கடமையாக உள்ளது. இப்போது யாழ்ப்பாணத்தில் சகல பிரதே சங்களிலும் பொலிஸ் நிலையங்கள் இயங்குகின்றன. இராணுவ முகாம்களும், காப்பரண்களும் கூட ஆங்காங்கே உள்ளன. எனவே பொதுமக்கள் புதியவர்களின் நடமாட்டம் தொடர்பில் எவர் மீதாவது சந்தேகம் கொண்டால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கலாம். எமக்கு என்ன என்று அல்லது இதனால் வீண் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எவரும் நினைக்கக்கூடாது. அவ்வாறு ஒவ்வொருவரும் நினைத்தால் நிலைமையை யார் சரி செய்வது? தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக வருவோரால் யாழ்ப்பாண கலாசாரம் சீரழிகிறது என்று அண்மையில் கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சரும் இதே கருத்தைக் கடந்த பல வருடங்களாகக் கூறிவரும் சில முகவரியில்லத இணையத் தளங்களும் உள்ளூரில் மக்களிடையே இவ்வளவு பாரதூரமான விடயங்கள் நடப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலில் தாம் சார்ந்த சமூகத்தைத் திருத்திக் கொண்டு ஏனையவர்களின் வருகை தொடர்பாக ஆராய வேண்டும்.

நாட்டில் மேலைத்தேய நாகரீகம் மிக உச்சமாக வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் அதனை அனுசரித்துப் போவதில் எவ்விதமான தப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தந்த இனத்திற்குரிய கலாசாரம், பண்பாடுகள் பேணிப் பாதுகாக்கப்படுவது மிக மிக அவசியம். உலகமே அழிந்தாலும் தமது கலாசாரத்தை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான மனிதன். அந்த மனிதன் அன்று யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளான். இன்று அது கேள்விக்குறியாகவே உள்ளது.

இவ்வாறு கூறுவதால் எல்லோரையும் குற்றஞ்சாட்டுவதாக அர்த்தப்படாது. ஆனால் இதுபோன்ற செய்திகள் பிறமொழிப் பத்திரிகைகளில் வெளிவரும்போது அது யாழ்ப்பாண மண்ணின் பாரம்பரியத்தையும், நற்பெயரையும் களங்கப்படுத் துகின்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபசாரம் போன்ற இழிசொற்களுக்கு இடமளிக்காது புதியதொரு யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்புவோம் என ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளாக இருப்போர் இவ்விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்லது. வெறுமனே அரசாங்கத்தைக் குறை கூறுவதால் மட்டும் மக்களுக்குச் சேவை செய்வதாக நினைத்துத் திருப்திப்பட வேண்டாம். இவ்வாறான குறைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும். தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விடயங்களிலும் அம்மக்கள் நலன் கருதி தமது கவனத்தைச் செலுத்துவது நல்லது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply