ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பின் இளைஞர்களின் தொழில் வாய்ப்பு தாமதமாகும் : அமைச்சர் ஜோன் செனவிரட்ன

அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ல் இருந்து 65 ஆக அதிகரிக்கும் பட்சத்தில் அரச சேவைகளில் புதிய ஆட்சேர்ப்புக்கள் செய்ய முடியாது. இதனால் வேலைவாய்ப்புக்களுக்காக இளைஞர்கள் மேலும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதேச சபைக்கு போட்டியிட்ட பட்டதாரி ஒருவருக்கும் அரச துறையில் நியமனம் வழங்கிய ஒரே ஒரு அரசு இந்த அரசாங்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கக் கோரும் தனிநபர் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்:-

அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுவோர் தமது பணிக்கொடையை ஓய்வூதிய திணைக்களத்திடமிருந்தோ வங்கி மூலமாகவோ விரும்பிய வகையில் பெற்றுக்கொள்ள முடியும். வங்கி மூலம் என்றால் ஒரு வார காலத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில் ஒரே தடவையில் 15,000 பேர் வரையில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறுவதால் அவர்களுக்கான பணிக் கொடையை ஓய்வூதியத் திணைக்களத்தால் உடனடியாக வழங்க முடியாது.

ஏனெனில் 15 ஆயிரம் பேருக்கு பணிக்கொடை வழங்குவது என்றால் 7000 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதனாலேயே காலதாமதம் ஏற்படுகின்றது.

அதனால் தான் ஓய்வுபெறுவோருக்கான பணிக்கொடையை வங்கி மூலம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஓய்வூதியத் திணைக்களத்தின் ஊடாக பணிக்கொடை வழங்குவதென்றால் மாதக் கணக்கு எடுக்கும். ஆனால் வங்கி மூலம் ஒரு வார காலத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இதற்காக ஓய்வுபெறுபவர் ஒரு சதம் கூட வட்டியை செலுத்த வேண்டியதில்லை. தற்போது 5000 பேர் வரை வங்கி மூலம் பணிக்கொடை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.

இதேவேளை, ஓய்வுபெறுபவர்கள் தமது பணிக்கொடையை வங்கி மூலம் மாத்திரம் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த கடடாயமும் இல்லை. ஓய்வூதியத் திணைக்களத் திடமா. வங்கியிடமா பெறுவது என்பதை சம்பந்தப்பட்ட ஓய்வுபெறும் நபரே தீர்மானிக்க முடியும் என்றார்.

அதேபோன்று தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்கள் 60 வயது வரை எவரிடமும் அனுமதி பெறாது (அரசியல் வாதிகளின் உதவியின்றி) கடமையாற்ற முடியும். சில நிபுணத்துவம்மிக்க நிரப்ப முடியாத சேவைகளில் ஈடுபடுவோரின் சேவை காலத்தை மாத்திரம் 65 வயது வரை நீடிப்பதானால் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply