அம்பாறையில் மேதினம் கொண்டாடி, அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு நாட்டில் பூரண சுதந்திரம் : ஜனாதிபதி
அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் அம்பாறையில் சுதந்திரமாக மே தினம் கொண்டாடியவர்களுமே நாட்டில் சுதந்திரம் இல்லையென சர்வதேசமெங்கும் பிரசாரம் செய்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வெளிநாட்டுத் தூதரகங்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வோரை நாம் அறிவோம். இது விடயத்தில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச தாதியர் தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு போராட்டங்கள் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தகைய பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.
அதிவேக வீதிபோன்று செயற்பாடுகள் வேகமாக இடம்பெறவேண்டும். எனினும் இன்னொருவன் பணத்திலல்ல என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச சார்பற்ற நிறுவனங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு எம்மால் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
சர்வதேச தாதியர் தினத்தையொட்டிய தேசிய நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் நாடளாவிய ரீதியிலிருந்து பல்லா யிரக்கணக்கான தாதியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சுகாதார சேவை நீண்டதோடு வரலாற்றைக் கொண்டது.
உலகில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த சேவை இது உலகில் மிகவும் பழமையான வைத்தியசாலை மிஹிந்தலையிலேயே உள்ளது என்ற வரலாறு பலருக்குத் தெரியாது. இலங்கையின் தாதியர் சேவையைப் போன்று சுகாதார சேவைக்கும் உலகளவில் நற்பெயர் உள்ளது. தாதியர் சேவையென்பது கெளரவமானது கருணை மிக்கதுமான சேவையாகும் அதனைப் பாதுகாப்பது தாதியர்களின் பொறுப்பாகும்.
தாதியர் சேவை மிக கஷ்டப்பட்டு கட்டி யெழுப்பப்பட்ட சேவை. ஐ.தே.க.வின் ஆட்சிக்காலத்தில் அதற்குரிய கெளரவம் வழங்கப்படவில்லை. பெளத்த பிக்கு அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கக் கூடாது என்று கூறி தாதியர்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் ஐ.தே.க. தலைவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
பெளத்த பிக்குவின் அபேராம விஹாரைக்கு குண்டு வீசிய சம்பவமும் அப்போது இடம்பெற்றது. தாதியர்களுக்கு வரலாற்றில் எந்த அரசாங்கமும் வழங்காத வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் நாமே வழங்கியுள்ளோம். அதற்காக நாம் எந்த அசெளகரியத்திற்கும் அவர்களை உள்ளாக்கியதில்லை.
அண்மையில் மேதினக் கொண்டாட்டங்கள் நாடெங்கிலும் சுதந்திரமாக நடந்தேறின. அம்பாறையிலும் மே தின நிகழ்வு நடைபெற்றது. எனினும் நாட்டில் சுதந்திரம் இல்லை என சிலர் கூறிவருகின்றனர். அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு சுதந்திரம் உள்ளபோதும் நாட்டில் சுதந்திரம் இல்லை என்று சர்வதேசமெங்கும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பெளத்த பிக்குகளுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதும் பொலிஸாரே அதனைச் செய்ததும் நாட்டின் கடந்த கால வரலாறாகும். பலர் இதனை மறந்து விட்டனர். இத்தகையயோர் மீண்டும் பதவிக்கு வந்தால் என்ன செய்ய மாட்டார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
போராட்டம் இன்றியே தாதிமார் பிரச்சினைக்கு சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும். உரிமைகளை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தையால் முடியும். அது தொடர்பில் நான் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழிகாட்டல்களை வழங்கியுள்ளேன்.
நாம் தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்குச் செவி மடுப்பவர்கள். கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று குளிரூட்டப்பட்ட அறையில் சர்வதேச நிதியத்தின் அதிகாரிகளை வைத்து வரவு செலவுத் திட்டம் தயாரித்தவர்கள் நாமல்ல. தொழிற் சங்கத்தினரதும் யோசனைகளைப் பெற்று வரவு செலவுத் திட்டம் தயாரித்தவர்கள் நாம்.
தாதியருக்கு சலுகை வழங்கியதும் தாதியர் கவுன்ஸில் அமைக்கவும் யாப்பு உருவாக்கவும் அனுமதி வழங்கி பாராளுமன்ற அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது எமது அரசாங்கமே.
அத்தோடின்றி 14,000 பேராயிருந்த தாதியர் எண்ணிக்கையை 30,000 மாக அதிகரித்ததும் அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொடுத்ததும் நாமே. இவற்றை நாம் எவரும் பேரணி நடத்தியோ போராட்டம் செய்ததாலோ வழங்கவில்லை.
அன்றைய ஆட்சிக் காலம் என்றால் இதற்காக எத்தகைய இழப்புகள், உயிர்ப் பலிகளையும் எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும் என்பதை தாதியர் உணர வேண்டும். மக்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். இது கெளரவமும் கருணையும் உள்ள தொழில் உங்களையும் உங்கள் தொழிலின் கெளரவத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள். டாக்டர்களினதும் தாதியரினதும் சேவையையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவாகப் பெற்றுக் கொடுங்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply