இலங்கை, தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் எதுவுமின்றி முடிவடைந்தது.
இலங்கை, தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் எதுவுமின்றி நேற்று முடிவடைந்தது. நேற்றுக்காலை கொழும்பு 8 கிங்ஸ்லி வீதியிலுள்ள சமூக பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையத்தின் (செடெக்) தலைமையகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் முதல்சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி விட்டுக்கொடுப்பின்றி மாலை 6.30 மணிவரை தொடர்ந்தும் நடைபெற்றது. இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து எவ்வகையிலும் இடமளிக்க முடியாதென இலங்கை மீனவப் பிரதிநிதிகள் நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்தனர். தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்து வதை உடனடியாக நிறுத்துகிறோம். ஆனால், இழுவைப் படகில் மீன்பிடிப்பதை உடனடியாக நிறுத்த முடியாது.
எனவே, வாரத்தில் மூன்று தினங்கள், மாதத்தில் 12 நாட்கள் என்பதன் படி 10 மாதங்களுக்கு 120 நாட்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடிக்க அனுமதி தரவேண்டுமென தமிழக மீனவர்கள் நேற்றைய பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தினர்.
இதன் காரணமாக நேற்றுக்காலை 9.30ற்கு ஆரம்பான இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்றுமாலை 6 மணிவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்தும் நடைபெற்றது.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒரு மாத காலத்திற்கு இலங்கை கடற்பரப்புக்குள் வரக்கூடாது என எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழக மீனவர்களாலேயே மீறப்பட்டது தொடர்பாக இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
தமிழக மீனவர்களால் இந்த உடன்பாடு மீறப்பட்டுள்ளது என்பதால், எதிர்வரும் 3 மாதங்களுக்கு தமிழக மீனவர்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை கடற்பரப்புக்குள் வராமல் இருப்பதை தமிழக மீனவர்கள் உறுதிசெய்ய வேண்டும். நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழக மீனவர்கள் இந்த மூன்று மாத காலத்தை கடைப்பிடிப்பார்களேயானால் மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கலாம் என இலங்கை மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய தரப்பில் கால்நடை மற்றும் மீன்வளத்துறை திணைக்களத்தின் தமிழ்நாட்டு அரசின் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி டொக்டர் எஸ்.விஜயகுமார், புதுடில்லி வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ஸ்ரீமதி சுசித்திரா துரை, புதுடில்லி வெளிவிவகார அமைச்சின் பிரதி செயலாளர் விஷ்வேஷ்நேஜி, புதுடில்லி விவசாய பணிப்பாளர் அஜெய் ஸ்ரீவட்சாவா, தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறைப் பணிப்பாளர் முன்னைநாதன், மேலதிக பணிப்பாளர் ரெங்கராஜன், பாண்டிச்சேரி அரசின் மீன்பிடித்துறை பணிப்பாளர் மேரி சின்னராணி, இலங்கையிலுள்ள இந்திய துணைத் தூதுவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கை தரப்பில் மீன்பிடிப் பணிப்பாளர் ஹெட்டியாராச்சி, அமைச்சின் ஆலோசகர் டொக்டர் சுபசிங்ஹ, தங்கவேலு சதாசிவம் மற்றும் மீனவப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply