யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து மக்களை மீளக்குடியமர்த்துவதே அரசின் இலக்கு: அனுர பிரியதர்ஷன யாப்பா

வன்னியில் யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் போதே உண்மையான சந்தோசத்தை அவர்கள் அடைவார்கள்.

இதனை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். புலிகளின் பிடிக்குள்ளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் இல்லையென்றாலும் எமது முழு சக்தியையும் பிரயோகித்து அவர்களுக்குரிய பாதுகாப்பு, உணவு, இருப்பிட வசதி, அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து வருகிறது எனவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவினர் அரச அதிகாரிகளின் வழிகாட்டலுடன் சென்று நேரில் நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டனர். வெகுவாகப் பாராட்டியும் உள்ளனர். ஆனால் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அங்கு மக்கள் வசதியின்றியும் உண்ண உணவின்றியும், மலசலம் கழிக்கக் கூட வசதியில்லாத நிலை இருப்பதாக கூறியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் கேட்டதுடன் இம்மக்களை எவ்வளவு காலம் நிவாரணக் கிராமங்களில் வைத்திருக்கப் போகிஅர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதுடன் தேவையான உணவு, உடை இருப்பிட வசதிகளையும் எம்மால் இயன்றளவு வழங்குகிறோம். சில குறைபாடுகள் இருக்கலாம். அவர்கள் தமது வீடுகளில் அனுபவித்த வசதிகளை பெற்றுக் கொடுத்துவிட முடியாது தான். அதற்காக ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் நபர் கூறியது அனைத்தையும் ஏற்க முடியாது. அவற்றை நான் நிராகரிக்கிறேன்.

ஒரேயடியாக 2000 பேர் எமது நிவாரணக் கிராமங்களுக்கு வரும் போது 100 வீதமான வசதியை ஒரே தடவையில் வழங்கிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் தாம் எதிர்பார்க்கின்ற வசதிகளை 100 வீதம் வழங்கவும் முடியாது.

எனவே தான் இறுதிக்கட்ட யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அகற்றப்பட்டு விட்டதற்கான சான்றிதழ்கள் பெறப்பட்டதும் உடனடியாக அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள்.

அப்போது தான் அவர்கள் உண்மையான சந்தோசத்தை அடைவார்கள்.

சுமார் 30 வருடங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவாறு யுத்தம் தான் ஒரேவழி என்ற மனநிலைக்குள் இருந்தவர்கள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து கொண்ருக்கிறார்கள்.

இவர்களை ஒவ்வொருவராக சோதனையிட்டுத்தான் எடுக்கின்றோம். இதில் கூட சிக்கல்கள் உள்ளன. மனித வெடிகுண்டுடன் கூட வந்தது நாம் அனைவரும் அறிந்த விடயம்தானே என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், புலிகள் இந்த மக்களை மந்தைகள் போல் அங்கும் இங்குமாக அழைத்து திரிந்த போது அடிப்படை வசதிகள் கிடைத்ததா? எந்த சர்வதேச அமைப்பு இவற்றை கண்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply