உயிரிழந்த இராணுவ படை வீரர்களை நினைவு கூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு முடியாது: விக்கிரமபாகு
யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ படை வீரர்களை சிங்கள மக்களால் நினைவு கூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர முடியாது? இத்தகைய செயற்பாடானது தமிழர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும் என குற்றஞ்சாட்டிய தெஹிவளை கல்கிசை நகர சபை உறுப்பினரும் நவசம சமாஜக்கட்சி தலைவருமான விக்கிரமபாகு கருணாரட்ன இவ்வாறான பயங்கரவாதச் செயற்பாட்டினால் அரசு நாட்டை பிளவுபடுத்தவே முயலுகின்றது. அவ்வாறாயின் இந்நாட்டை பிளவுபடுத்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தின் போது உயிரிழந்த சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் உறவுகளை வருடா வருடம் அவர்களுடைய குடும்பத்தவர்கள் நினைவு கூர்ந்து வருவது வழக்கம். யுத்தத்தின் போது மூவின மக்களும் உயிரிழந்தனர். இருப்பினும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் அப்பாவி தமிழ் மக்களே அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில் மே 18ம் திகதி யுத்த வெற்றி கொண்டாடப்படும் அதேவேளை யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ படை வீரர்களையும் சிங்கள மக்கள் நினைவு கூருவர்.
இருப்பினும் வடக்கு கிழக்கு பகுதிகளில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அரசினாலும் இராணுவத்தினராலும் தொடர்ந்தும் உரிமை மறுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் தமது உறவினை நினைவு கூருவதாயின் வீடுகளிலேயே நினைவு கூருவதுடன் பொது இடங்களில் நினைவு கூருவதனை அரசு தடை செய்துள்ளது. இதனூடாக அரசு தமிழர்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைத்து வருகின்றது.
போதாக்குறைக்கு யாழ். பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கர முற்பட்ட வேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் முன்னின்று செயற்பட்டமைக்காக எனக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
இம்முறை இராணுவம் மே 18ம் திகதிக்கு முன்பே இது தொடர்பில் உன்னிப்பாக செயற்பட்டு வருகின்றது. எனவே இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது. யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை சிங்களவர்களுக்கு நினைவு கூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு நினைவு கூர முடியாது.
எனவே அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையிலும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் வகையிலேயே நடந்து கொள்கிறது. இந்நிலையில் அரசின் செயற்பாடு இவ்வாறே தொடருமானால் நாட்டை பிளவுபடுத்துவதை தவிர வேறு வழியில்லை. எனவே நாட்டை இடது சாரி கட்சியினாலேயே நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வர முடியும்.
அரசின் நாடகம்
இதேவேளை, அரசாங்கத்திற்குள் புதிய நாடக அரங்கேற்றம் நடத்தப்பட்டு வருகின்றது. அதாவது அரசாங்கத்துடன் உட்பூசல்கள் இருப்பது போல் காட்டி அரசிலிருந்து விலகப் போவதாக அமைச்சர்களான விமல் வீரவன்ச சம்பிக்க ரணவக்க நாட்டிற்கு காட்சிப்படுத்தும் நாடக அரங்கேற்றமாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply