பிரிவினை வாதத்துக்கும் புலிகளுக்கும் புத்துயிரளிக்க பிரிட்டிஷ் அரசு முயற்சி : அருண் தம்பிமுத்து
எல்.ரி.ரி.ஈ ஆதரவு அமைப்புக்களின் செயற்பாடுகளை தமது நாட்டில் முன்கொண்டு செல்வதற்கு அனுமதிப் பதன் மூலம் எல்.ரி.ரி.ஈக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கு பிரிட்டன் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் சரத்துக்கு அமைய முன்னணி எல்.ரி.ரி.ஈ ஆதரவு அமைப்புக்களைத் தடைசெய்ய இலங்கை நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், நாடுகடந்த தமிப்ழம் அமைப்பு மே மாதம் 17ஆம் திகதி லண்டனில் மாநாடொன்று நடத்தவுள்ளமை தொடர்பாகக் கேட்டபோதே அருண் தம்பிமுத்து இவ்வாறு கூறினார்.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் அநாவசியமாக குரல் கொடுக்கும் நிலையில், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையொன்றைக் கொண்டுவரும் இலக்கில் உருத்திரகுமார் மாநாடொன்றை நடத்துவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இவ்வாறு அனுமதி வழங்குவதானது பிரிட்டனின் இரட்டை நிலைப்பாட்டையே வெளிக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உருத்திரகுமாரன் எல்.ரி.ரி.ஈயின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவர். இலங்கையில் பிரிவினையொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு குழுக்களில் முக்கியஸ்தர் என்றும் அருண் தம்பிமுத்து சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியரை பயங்கரவாத அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு பொறுப்பாகவிருந்த அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டன் தவறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, எல்.ரி.ரி.ஈ மற்றும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு அமைப்புக்களுக்கு எதிராக மேலைத்தேய நாடுகளான பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் விதித்திருக்கும் தடையானது காகிதங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்காததாலேயே எல்.ரி.ரி.ஈயை புத்துயிரளிப்பதற்கு அந்த நாடுகளிலேயே சில அமைப்புக்கள் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சின் பொது தொடர்பாடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜே.சாதிக் தெரிவித்தார்.
இந்த அமைப்புக்களால் தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்வரை இந்த நாடுகள் பயங்கரவாதத்தின் ஆபத்தை உணர்ந்துகொள்ளாது, வெறுமனே தடையை மட்டும் அறிவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply