புலிகளுக்கு பெரும் ஆளணிப்பற்றாக்குறை; சூசை,பொட்டு உட்பட சிரேஷ்ட தலைவர்கள் களத்தில்

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளும், அதிரடி படை அணியும் பல முனைகளில் வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினரின் கடுமையான தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், கடற் புலிகளின் தலைவர் சூசை கடல் வழி நடவடிக்கைகளிலும், லோரன்ஸ், பொட்டு அம்மான் மற்றும் விதுஷன் ஆகியோர் உட்பட சிரேஷ்ட தலைவர்கள் தரைவழி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனரென்று புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுவதாகவும் அவர்தெரிவித்தார்.

A-35 வீதியின் வடக்கே அதாவது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவும், ஏ௩5 வீதியின் தெற்கே அதாவது புதுக்குடியிருப்பு சந்திக்கு தெற்காக இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான படைப் பிரிவும் புலிகளின் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வேகமாக முன்னேறி வரு கின்றனர்.

இந்த இரு படைப் பிரிவுகளுக்கும் உதவியாக இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையை மற்றும் புதுமாத்தளன் வட பகுதியை கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படைப்பிரிவின் புதுமாத்தளன் தென்பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

கிழக்கு கடலோரமாக முன்னேறும் படையினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலிகள் பாதுகாப்பு மதில்களை அமைத்து வருகின்ற போதிலும் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்கள் மூலம் அதனை தகர்த்து வருகின்றனர் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து புலிகள் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தம்மிடமிருந்த சகல கோட்டைகளையும் பிரதான நகர்களையும் முற்றாக இழந்து குறுகிய காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிடப்பட்டுள்ள புலிகள் தற்பொழுது ஆளணி பற்றாக்குறையை எதிர் நோக்கியுள்ளமை அவர்களின் சிரேஷ்ட தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளமையை காண்பிப்பதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளை புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலின் போதும் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply