ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிரியா சிறுவனின் சிகிச்சைக்கு சவுதி மன்னர் உதவி
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.
ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
பல லட்சம் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், சிரியாவில் இருந்து வெளியேறி லெபனானில் தஞ்சம் அடைந்துள்ள தனது சகோதரியின் 5 வயது மகனுக்கு ‘லுகேமியா’ எனப்படும் எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்தப் புற்று நோய் ஏற்பட்டு அவன் மரணத்துடன் போராடி வருவதாகவும், கருணை மனம் படைத்தவர்கள் அவனது சிகிச்சை செலவுக்கு உதவிடும்படியும் அந்த சிறுவனின் புகைப்படத்தை உள்ளூர் டி.வி. சேனலில் வெளியிட்ட ஒருவர் லெபனானில் இருந்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த சிறுவனின் பரிதாப நிலை பற்றிக் கேள்விப்பட்ட சவுதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் உடனடியாக அவனது மருத்துவ சிகிச்சைக்கான முழுச் செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கேட்டு ஆனந்தமடைந்த சிறுவனின் தாய், ‘எனது மகனுக்கு நீங்கள் உதவியதுபோல், உங்களுக்கு இறைவன் என்றென்றும் பக்கதுணையாக இருந்து உதவிட வேண்டும். இது ஒரு தாயின் அடிமனதில் இருந்து வரும் வேண்டுதல். இதற்கு நிச்சயமாக இறைவன் கைமாறு செய்வான்’ என்று மன்னருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சிறுவனின் மருத்துவ சிகிச்சை சவுதியில் அளிக்கப்படுமா? அல்லது, மன்னர் பணம் செலுத்த லெபனானிலேயே சிகிச்சை தொடருமா? என்பது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply